/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் வினோதம் மாணவர்களை விளையாட வைக்கும் பள்ளி பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி
/
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் வினோதம் மாணவர்களை விளையாட வைக்கும் பள்ளி பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் வினோதம் மாணவர்களை விளையாட வைக்கும் பள்ளி பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் வினோதம் மாணவர்களை விளையாட வைக்கும் பள்ளி பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி
ADDED : ஜூன் 13, 2025 03:21 AM
புதுச்சேரி: ஆசிரியர் பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில், கலவை கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி வருவது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுாற்றாண்டை கடந்த பள்ளிகள் வரிசையில் புதுச்சேரி மிஷன் வீதியில், கலவை கல்லுாரி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி புதுப்பிக்கும் பணி முடிந்து அண்மையில் திறக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து கடந்த இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளியில் 6ம் வகுப்பு துவங்கி, 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு ஆசிரியர் உள்பட 5 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.
பிளஸ் 1 வகுப்பில் உள்ள 120 மாணவர்களுக்கு தமிழ் மற்றும் விலங்கியல் விரிவுரையாளர் ஆசிரியர் இருவர் மட்டும் இருந்தனர். வணிகவியல், இயற்பியல் விரிவுரையாளர் ஆசிரியர்கள் இருவர் கடந்த 6ம் தேதி வந்து சேர்ந்தனர். மேலும், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், பொருளியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இதுவரை விரிவுரையாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.
பள்ளி திறந்து 10 நாட்கள் ஆகியும் இதுவரை தமிழ் மற்றும் இயற்பியல் இரண்டு வகுப்புக்கள் மட்டுமே நடக்கிறது என, மாணவர்கள் கூறுகின்றனர். பள்ளிக்கு துணை முதல்வர் மட்டுமே உள்ளார்.
போதிய ஆசிரியர்கள் இல்லாததால் வகுப்புகள் எடுக்க முடியாத சூழ்நிலையை ஈடு செய்யும் விதமாக மாணவர்களுக்கு வாலிபால், கேரம் போர்டு, செஸ் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை கொடுத்து விளையாட வைப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி நகரில் உள்ள பிரபல பள்ளிக்கே இந்த நிலை என்றால், கிராமப்புற பள்ளிகளின் நிலையை என்ன சொல்வது. புதுச்சேரியில் உள்ள சில அரசு பள்ளிகளில் ஒரே பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை கண்டறிந்து கலவை கல்லுாரி பள்ளி போல் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை பள்ளிகளுக்கு இடம் மாற்றம் செய்யும் பணியை கோடை விடுமுறையின்போதே கல்வித் துறை அதிகாரிகள் செய்திருக்க வேண்டும்.
ஏற்கனவே இந்த பள்ளியில் பணியாற்றிய பல ஆசிரியர்கள் பள்ளி புதுப்பிக்கும் பணிக்காக தற்காலிக இடமாற்றத்தில் சில பள்ளிகளில் உள்ளனர். அவர்களை மீண்டும் இந்த பள்ளிக்கு மாற்ற வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?