புதுச்சேரியில் சர்வர் பிரச்னை பாஸ்போர்ட் சேவை முடங்கியது
புதுச்சேரியில் சர்வர் பிரச்னை பாஸ்போர்ட் சேவை முடங்கியது
ADDED : ஆக 12, 2026 06:28 AM

புதுச்சேரி: 'சர்வர்' பிரச்னை காரணமாக புதுச்சேரி பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவைகள் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் அவதி அடைந்தனர்.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் இங்கு 200-க்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் சேவைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில்,தேசிய அளவில் நேற்று சர்வரில் ஏற்பட்ட நெட்வொர்க் பிரச்சனை காரணமாக பொதுவான பாஸ்போர்ட் சேவைகள் சில மாநிலங்களில் முடங்கியது. அதேபோல் புதுச்சேரி பாஸ்போர்ட் அலுவலகத்திலும் வாக்-இன் சேவைகள் மட்டும் நேற்று தற்காலிகமாக ரத்தாகின. அதனைத் தொடர்ந்து பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் காலையில் இருந்து மாலை 4:00 மணி வரை காத்திருந்த வாக்-இன் விண்ணப்பதாரர்களுக்கு சர்வர் பிரச்னை காரணமாக பாஸ்போர்ட் சேவைகள் எதுவும் இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.
சர்வர் பிரச்னை சரியானவுடன், ஆக.11ம் தேதி நேற்று பாஸ்போர்ட் சேவைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டும் மீண்டும் வரும் ஆக.22ம் தேதி சனிக்கிழமை அன்று பாஸ்போர்ட் சேவைகள் பெறலாம் என்று அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பாஸ்போர்ட் சேவை பெறுவதற்காக காத்திருந்த 150 க்கும் மேற்பட்டோர் சேவைகள் பெற முடியாமல் திரும்பி சென்றனர்.
