ADDED : ஆக 12, 2026 05:23 PM
புதுச்சேரி: பெரியகாலாப்பட்டில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான கம்பி வேலியை சேதப்படுத்திய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியகாலாப்பட்டு, பாரதியார் நகரசை் சேர்ந்தவர் புண்ணியகோடி மனைவி கஸ்துாரி, 55. இவர், அதேப் பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு நிர்மலா என்பவரிடம் இருந்து ஏழரை சென்ட் இடத்தை வாங்கி, சுற்றி ரூ. 3 லட்சம் செலவில் கருங்கல் துாண் அமைத்து, இரும்புக் கம்பி வேலி அமைத்து பராமரித்து வந்தார்.
நிர்மலாவின் மகன் ரமேஷ், கஸ்துாரியின் மூத்த மகன் இளங்கோவனை மொபைலிலில் தொடர்பு கொண்டு, தாயிடம் வாங்கிய நிலத்திற்கு மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்தார். இதனால், இளங்கோவன் அவரது மொபைல் எண்ணை ‘பிளக்’ செய்தார். ஆத்திரமடைந்த ரமேஷ், நேற்று முன்தினம் இளங்கோவனை தேடி கஸ்துாரியின் வீட்டிற்குச் சென்று, அவரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும், நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலியை தனது நண்பர் அருணுடன் சேர்ந்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து பைக்கில் தப்பிச் சென்றார். இதுகுறித்து கஸ்துாரி அளித்த புகாரின் பேரில், ரமேஷ், அருண் ஆகியோர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
