/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பென்ஷனர்கள் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு
/
பென்ஷனர்கள் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு
ADDED : மார் 17, 2025 02:34 AM
புதுச்சேரி: புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கத்தினர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கம் சார்பில், கடந்த 12ம் தேதி, ஓய்வூதியர்களில் விருப்பம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு சுகாதார திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
விருப்பம் இல்லாதவர்களுக்கு நிலையான மருத்துவ உதவித் தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும். கதிர்காமத்தில் இயங்கி வரும் மத்திய அரசு சுகாதாரத் திட்ட மருத்துவ மையத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊர்வலமாக சென்று முதல்வரின் தனி செயலரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கம், மின்துறை முன்னாள் ஊழியர்கள் சங்கம் மற்றும் காவல்துறை பென்ஷர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நிலையான மருத்துவ உதவித்தொகை பிடித்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, முதல்வர் ரங்கசாமி, மத்திய அரசு சுகாதார திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் அத்திட்டத்தில் இணைந்து பயன்பெறவும், மற்றவர்களுக்கு நிலையான மருத்துவ உதவித்தொகையை தொடர்ந்து வழங்குவதற்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறினார். மேலும்,மத்திய அரசிடமிருந்து பதில் வந்தவுடன் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிலையில், முதல்வர், அனுப்பியுள்ள கடிதத்தின் அடிப்படையில், தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்களை கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.