/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூரிய மின்னொளி திட்டத்தில் பயன்பெற மக்கள் ஆர்வம்
/
சூரிய மின்னொளி திட்டத்தில் பயன்பெற மக்கள் ஆர்வம்
ADDED : ஜூலை 30, 2025 07:06 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் சூரிய மின்னொளி திட்டத்தில் மாநில அரசின் வீடு கட்டும் திட்ட பயனாளிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாட்டில் தினசரி அதிகரித்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்ட பிரதமர் மோடி, நாடு முழுக்க ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கிட ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டில் சூரிய மின்னொளி திட்டத்தை கடந்தாண்டு பிப்., 13ம் தேதி துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தை வரும் 2027 மார்ச் 31ம் தேதிக்குள் நிறைவேற்றிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு, திட்டத்தில் சேரும் பயனாளிகளுக்கு ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க ரூ. 30 ஆயிரம் வீதம் அதிகப்பட்சம் ரூ.78 ஆயிரம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இத்திட்ட இலக்கை உரிய காலக்கெடுவிற்குள் நிறைவேற்றிடும் பொருட்டு அனைத்து மாநிலங்களுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாநில மின்துறையிலும் பிரதமரின் சூரிய மின்னொளி திட்டத்திற்காக தனிப்பிரிவு துவங்கி சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதுச்சேரியில் தற்போதுள்ள 3.8 லட்சம் மின் இணைப்புகளில் 3 சதவீதமான 13 ஆயிரம் மின் இணைப்புகளை பிரதமரின் சூரிய மின்னொளி திட்டத்திற்கு மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக பிரதமரின் சூரிய மின்னொளி திட்ட அதிகாரிகள், ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர். அதன்பயனாக, மாநிலத்தில் 2,223 பேர் தங்கள் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் கடந்த நிதியாண்டில் 752 பேர் தங்கள் வீடுகளில் சோலார் பேனல்களை அமைத்து, மின்கட்டண சுமையின்றி, மின்சார வசதி பெற்று வருகின்றனர்.
தற்போது ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்வதால், மின் கட்டண சுமையை தவிர்க்க, பிரதமரின் சூரிய மின்னொளி திட்டத்தை பயன்படுத்தி, தங்கள் வீடுகளில் அமைத்திட ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். அதன்பயனாக இந்த நிதியாண்டில் நேற்று முன்தினம் வரை, அதாவது கடந்த 4 மாதத்தில் 538 பேர் தங்கள் வீடுகளில் சோலார் பேனல் அமைத்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை 1,290 பேர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசின் மானியமாக ரூ.9.14 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சூரிய மின்னொளி திட்டத்தில் பங்கேற்ற மக்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். அதே நேரத்தில் மாநில அரசு, தாங்கள் தேர்வு செய்யும் வீடு கட்டும் திட்ட பயனாளிகளை இத்திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.