sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொட்டிய கனமழையால் புதுச்சேரி மக்கள் தவிப்பு: மீட்பு பணிகளில் அரசு நிர்வாகம் தீவிரம்

/

கொட்டிய கனமழையால் புதுச்சேரி மக்கள் தவிப்பு: மீட்பு பணிகளில் அரசு நிர்வாகம் தீவிரம்

கொட்டிய கனமழையால் புதுச்சேரி மக்கள் தவிப்பு: மீட்பு பணிகளில் அரசு நிர்வாகம் தீவிரம்

கொட்டிய கனமழையால் புதுச்சேரி மக்கள் தவிப்பு: மீட்பு பணிகளில் அரசு நிர்வாகம் தீவிரம்


UPDATED : அக் 23, 2025 06:38 AM

ADDED : அக் 22, 2025 11:03 PM

Google News

UPDATED : அக் 23, 2025 06:38 AM ADDED : அக் 22, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில், வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் திடீரென கொட்டிய கனமழையால் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் மழை நீர் தேங்கியதால் மக்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர்.

புதுச்சேரியில் வடகிழக்கு பருமழை கடந்த 16ம் தேதி துவங்கி அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக காலை முதல் மதியம் வரை 2.7 செ.மீ., மழை பெய்தது. அதன்பிறகு சற்று ஓய்ந்த நிலையில், இரவு 8.30 மணி முதல் 10 மணிக்குள் 15 செ.மீ., அளவிற்கு கனமழை கொட்டியது. அதன்பிறகு மழையின் வேகம் சற்று குறைந்து விடியற்காலை வரை மழை துாறிக் கொண்டிருந்தது.

மழை அளவு

நேற்று காலை 8:30 மணிவரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விபரம் செ.மீ., வருமாறு: பெரியக்காலாப்பட்டு 24.8 செ.மீ., புதுச்சேரி 20.7; பாகூர் 19.7; பத்துக்கண்ணு 15.5; லாஸ்பேட்டை 14.7; திருக்கனார் 14.6 செ.மீ., மழை பதிவாகியது.

வீடுகளில் புகுந்த மழை நீர்

ஒன்றரை மணி நேரத்தில் 15 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டியதால், புதுச்சேரி நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக புதுச்சேரி இந்திரா சதுக்கம், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், கவிக்குயில் நகர், சக்தி நகர், சுதானா நகர், நயினார் மண்டபம், முதலியார்பேட்டை, புவன்கரே வீதி, பாவாணர் நகர், பூமியான்பேட், பெரியார் நகர், முத்தியால்பேட்டை, டி.வி.நகர், பெரியகாலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வீடுகளில் புகுந்ததால், மக்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர்.

சாலைகளில் வெள்ளப் பெருக்கு

கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் சதுக்கம், இந்திரா சதுக்கம், கடலுார் சாலையில் பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பைக், ஸ்கூட்டர் மற்றும் சில கார்களில் தண்ணீர் புகுந்து பழுதடைந்தன.

லாஸ்பேட்டை, பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை உள்ளாட்சி, பொதுப்பணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.

படகுகள் சேதம்:

பெரியகாலாப்பட்டில் அதிகப்பட்சமாக 25 செ.மீ., மழை பெய்தது. அதன்காரணமாக சின்னகாலாப்பட்டிற்கு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில், கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மற்றும் கரையில் வைத்திருந்த மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்கள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டன.

அதனை மீனவர்கள் வெகு நேரம் போராடி மீட்டனர். இதில் பல படகுகள் சேதமடைந்ததால், மீனவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர்.

கடலரிப்பு

வங்கக்கடலில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதிதீவிர காற்றத்தழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால், பெரியக்காலாப்பட்டில் கடற்கரை பகுதியில் 20 அடி துாரத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டதால், மீனவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.

நீரில் மூழ்கியவிளை நிலங்கள்

கனமழை காரணமாக ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், வீடூர் மற்றும் சாத்தனுார் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், சங்கராபரணி மற்றும் தென்பெண்ணையாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஆற்றங்கரை மற்றும் ஏரி அருகே உள்ள விளை நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக பாகூர், வில்லியனுார், திருக்கனுார், பத்துக்கண்ணு, நெட்டப்பாக்கம் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் அளவிற்கு சம்பா பட்டத்திற்கு நடவு செய்த இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நெற்பயிர்களை காப்பாற்ற, விவசாயிகள் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். முதல்வர் ரங்கசாமி, மழை பாதிப்பை பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகள் சுறுசுறுப்பு

திடீர் கனமழையால் புதுச்சேரியே தண்ணீரில் தத்தளிப்பதை தொடர்ந்து, கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் வருவாய் துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை ஊழியர்கள் குடியிருப்பு சாலைகளில் தேங்கிய மழை நீரை வாய்க்கால் வெட்டியும், ராட்சத இன்ஜின்களை கொண்டும் வெளியேற்றினர்.

அதே நேரத்தில், வலுவடைந்த காற்றழுத்த நிலை நேற்று விடியற்காலை வலுவிழந்ததால், மழை நின்றதோடு, காலை முதல் வெயிலும் காயத் துவங்கியது. இதனால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.






      Dinamalar
      Follow us