ADDED : ஆக 19, 2026 11:44 PM
புதுச்சேரி: அங்கன்வாடி ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என, அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இது குறித்து அங்கன்வாடி ஒப்பந்த பணியாளர்கள் அமைச்சர் சிவக்கொழுந்துவிடம் அளித்த மனு:
புதுச்சேரி மகளிர் மற்றும குழந்தைகள் மேம்பாட்டு கழகம் சார்பில், கடந்த 2021ம் ஆண்டு முதல் அங்கன்வாடிகளில், உதவியாளர் 74, பணியாளர் 103 என, மொத்தாம் 177 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம். குழந்தைகளை பராமரிப்பது, கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு சத்துணவு வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.
மேலும், கொரோனா காலங்களில் மக்கள் நல பணி, போலியோ சொட்டு மருந்து வழங்கல், சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளையும் கூடுதலாக செய்து வருகிறோம்.
பணியில் சேர்ந்து, 6 ஆண்டுகள் ஆகியும், எங்களை நிரந்தரம் செய்யவில்லை. நாங்கள் அருகில் இருக்கும் பணியாளர்கள் இல்லாமல் உள்ள அங்கன்வாடிகளையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறோம். எங்களுக்கு சம்பளமும் குறைவாக வழங்கப்படுகிறது. அந்த சம்பளமும் கடந்த 5 மாதங்களாக வழங்கவில்லை. எனவே எங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கவர்னரிடமும் மனு கொடுத்ததாகவும் அங்கன்வாடி ஒப்பந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.
