குடிநீரில் சோப்பு திரவம் கலப்பு தனியார் நிறுவனம் மீது வழக்கு
குடிநீரில் சோப்பு திரவம் கலப்பு தனியார் நிறுவனம் மீது வழக்கு
ADDED : ஆக 19, 2026 11:44 PM
பாகூர்: பாகூர் அருகே குடிநீரில் சோப்பு திரவம் கலக்க காரணமான தனியார் நிறுவனத்தின் மீதான மின் திருட்டு புகார் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த அரங்கனுார் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில், சோப்பு திரவம் கலந்து நுரையாக குடிநீர் பொங்கி வழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு, அங்கு செயல்பட்டு வந்த தனியார் சோப்பு திரவம் பேக் செய்யும் நிறுவனத்திற்கான குடிநீர் இணைப்பினை துண்டித்தனர். மேலும், புதுச்சேரி மாசுக் கட்டுப்பட்டு குழுமம், அந்த நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிட்டது.
இதனிடையே, அந்த நிறுவனம் திருட்டு மின்சாரம் மூலமாக இயங்குவது தெரியவந்ததால், அந்த நிறுவனத்தின் மின் இணைப்பு கடந்த 14ம் தேதி துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த சில நாட்களில், அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மீண்டும் திருட்டு தனமாக மின் இணைப்பு எடுத்து, கம்பெனியை நடத்தியது தெரியவந்தது. இது குறித்து மின் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மின் இணைப்பினை துண்டித்தனர்.
மின் திருட்டு குறித்து, பாகூர் மின் துறை அலுவலக இளநிலை பொறியாளர் ராம்குமார், பாகூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான அரங்கனுாரை சேர்ந்த கணேசன் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
