/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார உதவியாளர்களை இடமாற்றம் செய்ய கோரி மனு
/
சுகாதார உதவியாளர்களை இடமாற்றம் செய்ய கோரி மனு
ADDED : அக் 29, 2025 05:57 AM
புதுச்சேரி: நியமன விதிப்படி தேர்வு செய்யப்பட்ட சுகாதார உதவியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசு தொழில்நுட்ப உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத் துறை இயக்குனருக்கு, சங்கத்தின் தலைவர் ஜெகநாதன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்தாண்டு ஜூலை மாதம், புதுச்சேரியில் இருந்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இடமாற்றல் கொள்கை அடிப்படையில், காரைக்காலில் ஓராண்டு பணி முடித்தவர்களை, மீண்டும் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஓராண்டு முடிந்தும் அவர்களை புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலகத்தில் கேட்டால் சுகாதார ஆய்வாளர் பதவி உயர்வு கோப்புகள் நிலுவையில் உள்ளன என்றும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட சுகாதார உதவியாளர்களுக்கு பணி நியமன உத்தரவு அளிக்க வேண்டியுள்ளது என்றும் காரணம் கூறுகின்றனர்.
எனவே, சுகாதார உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டும், உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்கி, பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் உள்ள சுகாதார உதவியாளர்களை புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

