/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரிப்பாக்கம் கோவிலுக்கு வழி கேட்டு கவர்னரிடம் மனு
/
ஏரிப்பாக்கம் கோவிலுக்கு வழி கேட்டு கவர்னரிடம் மனு
ADDED : மே 17, 2025 03:44 AM

புதுச்சேரி: ஏரிப்பாக்கம் பொறையாத்தம்மன் கோவிலுக்கு வழி கேட்டு, அப்பகுதி கிராம மக்கள் அசோக்பாபு எம்.எல்.ஏ., முன்னிலையில் கவர்னரிடம் மனு அளித்தனர்.
நெட்டப்பாக்கம் தொகுதி, ஏரிப்பாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த பொறையாத்தம்மன் அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏரிப்பாக்கம், நத்தமேடு, அந்த ராசிக்குப்பம் ஆகிய பகுதிகளில் வாழும் கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கல்மண்டபத்தில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலை நிர்வாகம், கோவிலை சுற்றி மதில் சுவர் அமைத்துள்ளனர். இதனால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் கோவிலுக்கு விழா நடத்துவதற்கும், கோவிலுக்கு செல்ல வழி பலமுறை கேட்டும் தொற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவிலுக்கு வழி ஏற்படுத்தி தர வலியுறுத்தி ஏரிப்பாக்கம் கிராம மக்கள் அசோக் பாபு எம்.எல்.ஏ., வை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து பொறையாத்தம்மன் கோவிலுக்கு இறை வழிபாடு செய்வதற்கும், 20 அடி பொது பாதை அமைத்து தர வேண்டியும் அசோக் பாபு எம்.எல்.ஏ.,, தலைமையில், கவர்னர் கைலாஷ்நாதனை, கவர்னர் மாளிகையில் சந்தித்து மனு அளித்தனர். மனுவினை பெற்றுக் கொண்ட கவர்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஏரிப்பாக்கம் கிராம முக்கியஸ்தர் ராமகிருஷ்ணன், கோவில் நிர்வாக அதிகாரி ரமேஷ், திருப்பனி குழு தலைவர் சதீஷ்குமார், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் அருள்ராஜ், பா.ஜ., நெட்டப்பாக்கம் தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் தீனதயாளன், மலரழகன், கிருஷ்ணமூர்த்தி, சுகுமாரன் ஆகியோர் உடனிருந்தனர்.