/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் குண்டு வீச்சு புதுச்சேரி ரவுடிக்கு வலை
/
பெட்ரோல் குண்டு வீச்சு புதுச்சேரி ரவுடிக்கு வலை
ADDED : டிச 12, 2024 02:07 AM

கண்டமங்கலம்:புதுச்சேரி, ஆட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுனில். ரவுடியான இவர் மீது கஞ்சா, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டு காலனியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை, காதல் திருமணம் செய்து கொண்டார்.
தாய் வீட்டிற்கு சென்றிருந்த மனைவியை பார்க்க, சுனில் 8ம் தேதி சித்தலம்பட்டிற்கு சென்றார். அன்று இரவு, அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் யாசிக், கவியரசன் உள்ளிட்டோருடன் திருக்கனுாரில் உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் சுனில் - யாசிக் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுனில், மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் யாசிக் தொடையில் கிழித்துள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, கவியரசன் வீட்டின் முன் பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. இதில், குண்டு வெடித்த இடத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த கறவை மாடு காயமடைந்தது. கண்டமங்கலம் போலீசார் விசாரித்தனர். முன் விரோதம் காரணமாக சுனில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. தலைமறைவான சுனிலை தேடி வருகின்றனர்.