தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாமூல் கேட்டு அரிசி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு வில்லியனுாரில் பரபரப்பு

மாமூல் கேட்டு அரிசி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு வில்லியனுாரில் பரபரப்பு

மாமூல் கேட்டு அரிசி கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு வில்லியனுாரில் பரபரப்பு


ADDED : ஆக 13, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 11:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுாரில் மாமூல் கேட்டு கொடுக்காததால் அரிசிக்கடை மீது பிரபல ரவுடி மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி, வில்லியனுார், தில்லை நகரை சேர்ந்தவர் பாபு. இவர் தனது சகோதரர் ராஜேந்திரன் உடன் இணைந்து வில்லியனுார் மார்க்கெட் வீதியில் பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர்.

வில்லியனுார், சாமியார்தோப்பு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் பிரபல ரவுடி வினோத், 25, நேற்று மாலை 6:30 மணியளவில் பைக்கில் அரிசி கடைக்கு வந்து, பாபுவிடம் மாமூல் கேட்டதுடன், கடை வீதியில் உள்ள மற்ற கடைகளிலும் மாமூல் வசூலித்து தனக்கு கொடுக்குமாறு கூறிவிட்டு சென்றார்.

பின், இரவு 8:30 மணியளவில் மீண்டும் கடைக்கு வந்த வினோத், மாமூல் பணத்தை கொடுக்குமாறு பாபுவிடம் கேட்டார்.  பாபு மாமூல் தர மறுத்தார். ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்ற வினோத், இரவு 9:00 மணியளவில் மீண்டும் பைக்கில் கடைக்கு வந்து, கடையின் மீது அடுத்தடுத்து பீர் பாட்டிலினால் தயாரித்த மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசினார்.

கடைக்குள் இருந்த ராஜேந்திரன், பாபு மற்றும் அவரது மனைவி திரிபுரசுந்தரி ஆகியோர் கடையை விட்டு வெளியே ஓடிவந்தனர். மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து தீ பரவியதால் மார்க்கெட் வீதியில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிதால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தில் கடையில் இருந்த டிவி.,  அரிசி மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு பகுதி எஸ்.பி., சுப்பமணியன் மற்றும் வில்லியனுார் இன்ஸ்பெக்டர்  கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் குண்டு வீசிய பகுதியை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து, விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய ரவுடி வினோத்தை தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரவுடி வினோத் மீது அடிதடி, கஞ்சா விற்பனை, மாமூல் வசூல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. 

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வில்லியனுார் மார்க்கெட் வீதியில்  பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us