புதுச்சேரியில் இண்டி கூட்டணி... வி.சி., கம்யூ.,க்கள் தனித்து போட்டி
புதுச்சேரியில் இண்டி கூட்டணி... வி.சி., கம்யூ.,க்கள் தனித்து போட்டி
ADDED : மார் 24, 2026 10:51 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் வி.சி., மற்றும் கம்யூ., கட்சிகள் தனித்து போட்டியிடுவதாலும், தி.மு.க., தொகுதிகளில் காங்., கட்சியினர் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாலும், இண்டி கூட்டணி தொடர்கிறதா என்ற குழப்பம் தொண்டர்கள் மட்டுமன்றி, வாக்காளர்கள் மத்தியிலும் மேலோங்கி உள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தே.ஜ., கூட்டணியும், காங்., - தி.மு.க., - கம்யூ., - வி.சி., கட்சிகள் உள்ளிட்ட இண்டி கூட்டணியிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீண்ட இழுபறிக்கு பின் கடந்த 20ம் தேதி இறுதியானது. அதனைத் தொடர்ந்து 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இறுதி நாளில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால், இண்டி கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சவார்த்தை, மனு தாக்கலுக்கு இறுதி நாளான நேற்று முன்தினம் காலைவரை நீடித்தது. இதனால், கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சியினரும் அவரவர் விரும்பிய தொகுதிகளில் மனு தாக்கல் செய்தனர்.
தனித்தனியாக மனு தாக்கல் அதில், இந்திய கம்யூ., கட்சியினர் தட்டாஞ்சாவடி மற்றும் உழவர்கரை ஆகிய இரு தொகுதிகளிலும், வி.சி.க.,வினர் உழவர்கரை, ஊசுடு(தனி), மற்றும் திருபுவனை(தனி) ஆகிய மூன்று தொகுதிகளில் மனு தாக்கல் செய்தனர்.
தாமதமான பங்கீடு நீண்ட இழுபறிக்கு பின் நேற்று முன்தினம் மதியம் (மனு தாக்கல் முடிய 2 மணி நேரத்திற்கு முன்பாக) ஒரு மணிக்கு கூட்டணியில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டதாகவும், அதில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்., -16; தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் 14 தொகுதிகளை பங்கீட்டு கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தி.மு.க., தான் போட்டியிடும் 13 தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. மேலும், தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான உழவர்கரை தொகுதியை, கூட்டணி கட்சியான வி.சி.க.,விற்கு ஒதுக்கியுள்ளது.
வி.சி., தனித்து போட்டி இந்நிலையில், இண்டி கூட்டணியில் அங்கம் வகித்துள்ள வி.சி.க., புதுச்சேரியில் உழவர்கரை, ஊசுடு(தனி), திருபுவனை (தனி) ஆகிய மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாகவும், பிற தொகுதிகளில் இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் என. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
மா.கம்யூ., தனி ஆவர்த்தனம் இதேபோன்று தமிழகத்தில் இண்டி கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மா.கம்யூ.,விற்கு புதுச்சேரியில் தொகுதி இல்லை என அறிவித்ததால், அக்கட்சி சார்பில் முத்தியால்பேட்டை, பாகூர், திருபுவனை(தனி) மற்றும் லாஸ்பேட்டை ஆகிய 4 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.
'ஏ'மற்றும் 'பி' படிவங்கள் தொகுதி பங்கீட்டில், இழுபறி நீடித்தால், 14 தொகுதிகளில் காங்., மற்றும் தி.மு.க.,வினரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்டனர். நேற்று முன்தினம் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இவ்விரு கட்சி தலைமைகளும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற வலியுறுத்தி வருகிறது.
தி.மு.க., தலைமை, காங்., தொகுதிகளில் மனு தாக்கல் செய்த தன்கட்சி வேட்பாளர்களுக்கு 'ஏ' மற்றும 'பி' படிவங்களை வழங்கவில்லை. அதனால், அவர்களது மனுக்கள் நேற்று நடந்த மனு பரிசீலனையில் தள்ளுபடியானது. காங்., கட்சி அவ்வாறு செய்யாமல், மனு தாக்கல் செய்த அனைவருக்கும் 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை வழங்கியுள்ளது. இதனால், அவர்களின் மனுக்கள் நேற்றைய பரிசீலனையில் ஏற்கப்பட்டுள்ளது.
வாபஸ் பெறாவிட்டால் சிக்கல் இதனால், தொகுதி பங்கீட்டில் தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்ட காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மங்கலம் மற்றும் திருபுவனை (தனி) ஆகிய 5 தொகுதிகளில் காங்., வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் காங்., வேட்பாளர்கள் இன்று அல்லது நாளைக்குள் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால் கூட்டணி உடைவது உறுதியாகி உள்ளது.
