/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்விகடன் பெற்று மோசடி செய்த குடும்பம்; தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தல்
/
கல்விகடன் பெற்று மோசடி செய்த குடும்பம்; தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தல்
கல்விகடன் பெற்று மோசடி செய்த குடும்பம்; தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தல்
கல்விகடன் பெற்று மோசடி செய்த குடும்பம்; தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தல்
ADDED : ஆக 09, 2025 07:30 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டையில் போலி பத்திரம் மூலம் வங்கியில் கல்விகடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட, குடும்பத்தினர் குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த பாலமுத்துவேல் மகன் தியாகராஜன். இவர் மேற்படிப்பிற்காக இந்தியன் வங்கியில் கடந்த 2009ம் ஆண்டு, தனது தாய் காந்திமதி பெயரில் இருந்த 4,650 சதுரடி இடத்தின் சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து, ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் கல்விக்கடன் பெற்றார். அதற்கு அவரது தந்தை பாலமுத்துவேல் உத்தரவாதமும் அளித்திருந்தார்.
ஆனால், தியாகராஜன் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத காரணத்தால், அடமானம் வைத்த பத்திரத்தில் இருந்த இடத்தை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் ஏலம் அறிவித்தது.
அப்போது, சென்னையில் உள்ள மத்திய கலால் துறை, ஏலம் அறிவித்த இடம் தங்களுக்கு சொந்தமானது என, தெரிவித்தது.
இதனால், வங்கி நிர்வாகம் அதிர்ச்சியடைந்து, காந்திமதி பெயரில் தியாகராஜன் அளித்த இடத்தின் பத்திரத்தை ஆய்வு செய்தபோது, அந்த பத்திரம் போலியானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் லாஸ்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில், போலி பத்திரம் கொடுத்து, வங்கியில் கல்விக்கடன் பெற்ற தியாகராஜன், அவரது தந்தை பாலமுத்துவேல், தாய் காந்திமதி ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மோசடி வழக்கில் தலைமறைவாகியுள்ள குடும்பத்தினர் பற்றிய தகவல் தெரிந்தால், 0413- 2234097, 9791816507, 9894276601 எண்களில் தெரிவிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.