UPDATED : நவ 11, 2026 07:57 PM
ADDED : நவ 11, 2026 07:52 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே பழிக்கு பழியாக நடந்த கொலை வழக்கில், கோர்ட்டில் ஆஜரான நான்கு பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு குளுனி பள்ளி அருகே உள்ள காலிமனை பிரிவில், அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த முருகன் மகன் முரளி, 24, உள்ளிட்ட நண்பர்கள் மது குடித்தனர். அப்போது நான்கு பைக்கில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் முரளியை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.
முரளியின் தாய் வள்ளி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இதற்கிடையில் ஆத்துவாய்க்கால்பேட்டை சேர்ந்த பிரபாகரன் மகன் தீனா மற்றும் அவரது நண்பர் திலீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த ஜன., 25ம் தேதி இரவு வி.மணவெளி திருவேணி நகர் மந்தவெளியில் நடந்த தீனாவின் அண்ணன் ஜனா, 24, கொலை வழக்கில் முரளி உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சில மாதங்களுக்கு முன், ஏழு பேரும் ஜாமினில் வெளியே வந்தனர். தனது அண்ணன் ஜனாவை, கொலை செய்த கும்பலை, பழிதீர்க்க அவரது தம்பி தீனா தலைமையில் சென்றவர்கள் தான் கொலை செய்தனர் என்பது உறுதியானது.
இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய ஆத்துவாய்க்கால்பேட் சரத், விஷ்வா, அரவிந்தன் மற்றும் பிரதீப் ஆகியோர் நேற்று முன்தினம் புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரையும் நேற்று வில்லியனுார் போலீசார் காவலில் எடுத்தனர்.
அவர்களிடம் கொலையில் யார் யார் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
