ADDED : மார் 11, 2024 06:43 AM
பாகூர், : சோரியாங்குப்பம் சாராயக்கடை அருகே பெயிண்டர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார், நத்தப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், 47; பெயிண்டர். இவரது மனைவி நாகலட்சுமி 37. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பரமசிவத்திற்கு குடிப் பழக்கம் இருந்ததால், சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், நாகலட்சுமி பிரிந்து சென்று, பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
பரமசிவம் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், அவரால் மது பழக்கத்தை விட முடியவில்லை. கடந்த 9ம் தேதி காலை சோரியாங்குப்பத்தில் உள்ள சாராயக்கடை அருகே பரமசிவம் இறந்து கிடந்தார்.
புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து, அவர் மது போதையில் இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.

