/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பா.ஜ., - காங்., பயங்கர மோதல்; போலீஸ் தடியடி; எஸ்.பி., உட்பட 10 பேர் காயம்
/
புதுச்சேரியில் பா.ஜ., - காங்., பயங்கர மோதல்; போலீஸ் தடியடி; எஸ்.பி., உட்பட 10 பேர் காயம்
புதுச்சேரியில் பா.ஜ., - காங்., பயங்கர மோதல்; போலீஸ் தடியடி; எஸ்.பி., உட்பட 10 பேர் காயம்
புதுச்சேரியில் பா.ஜ., - காங்., பயங்கர மோதல்; போலீஸ் தடியடி; எஸ்.பி., உட்பட 10 பேர் காயம்
ADDED : பிப் 22, 2026 05:57 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், உருட்டு கட்டைகளுடன் மோதலில் ஈடுபட்ட காங்., மற்றும் பா.ஜ.,வினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
டில்லியில், பிரதமர் மோடி பங்கேற்ற சர்வதேச ஏ.ஐ., மாநாட்டில், இளைஞர் காங்., கட்சியினர், 10 பேர் சட்டை அணியாமல் நுழைந்து, பிரதமருக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
சர்வதேச மாநாட்டில் நாட்டை சிறுமைப்படுத்திய காங்., கட்சியை கண்டித்து, நாடு முழுதும் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வழக்கு பதிவு அதன்படி, புதுச்சேரி பா.ஜ., இளைஞரணியினர், நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்று, வைசியாள் வீதியில் உள்ள காங்., தலைமை அலுவலகம் முன், ராகுல் உருவ பொம்மையை எரித்தனர். ராகுலையும், காங்., கட்சியையும் கண்டித்து கோஷமிட்டு கலைந்தனர்.
இதுகுறித்து, ராஜ்பவன் தொகுதி காங்., தலைவர் ராஜ்மோகன் புகாரில், 10க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர் மீது பெரியகடை போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், பா.ஜ., போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட 100க்கும் மேற்பட்ட காங்., கட்சியினர், இந்திரா சதுக்கம் அருகில் சித்தானந்தா நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட திரண்டனர்.
போர்க்களம் அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர்.
அப்போது, காங்., கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த பிரதமர் மோடி உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி எரித்து, மோடியை கண்டித்தும், பா.ஜ.,வை கண்டித்தும் கோஷமிட்டனர்.
பா.ஜ.,வினர் உருட்டு கட்டைகளுடன் அங்கு திரண்டதால், இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சற்று நேரத்தில் இரு தரப்பினரும் சரமாரியாக கற்கள் மற்றும் செருப்புகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
பொதுமக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். கல்வீச்சில், போலீஸ் எஸ்.பி., வம்சிதரெட்டி, எஸ்.ஐ., கலையரசன் மற்றும் இரு கட்சிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நிலைமை மோசமானதால், போலீசார் தடியடி நடத்தினர். இரு கட்சியினரும் சிதறி ஓடினர். இதனால், கடலுார், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் சென்னை மார்க்க போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.
காங்., கட்சியினர் மீது சட்ட விரோதமாக கூடுதல், வன்முறையில் ஈடுபட்டது , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

