பெண்ணிடம் ரூ. 7 லட்சம் மோசடி இருவருக்கு போலீஸ் வலை
பெண்ணிடம் ரூ. 7 லட்சம் மோசடி இருவருக்கு போலீஸ் வலை
ADDED : செப் 11, 2026 11:04 PM
புதுச்சேரி: கனடாவில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, வேல்முருகன் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியனின் மனைவி கலா, 50. இவரது மகன் திருமுருகன், 23. இவர்களது வீட்டிற்கு திருமுருகனின் நண்பரான சேலத்தை சேர்ந்த மோகன்குமார் என்பவர் அடிக்கடி வந்து சென்றார்.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், மோகன்குமார், அவரது மாமா ரோகித் ஆகியோர் திருமுருகனை கனடா நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து பல்வேறு தவணைகளாக 7 லட்சம் ரூபாயை கலா கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் விசா பிரச்னை இருப்பதால் ஜனவரி மாதம் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து போர் பதற்றம் காரணமாக மே மாதம் பணத்தை திரும்ப தந்துவிடுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பின் கலா பல முறை போன் செய்தாலும் அவர்கள் போனை எடுக்காமல் தவிர்த்து வந்தனர்.
இது குறித்து கலா உருளையன்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, மோகன்குமார் உட்பட இருவரையும் தேடி வருகின்றனர்.
