/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாடிபில்டரை கொல்ல முயன்ற கும்பலுக்கு போலீஸ் வலை
/
பாடிபில்டரை கொல்ல முயன்ற கும்பலுக்கு போலீஸ் வலை
ADDED : ஜூலை 16, 2025 01:41 AM
பாகூ : கிருமாம்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், 25; கார் டிரைவர். இவர், கடந்த ஏப்., 1ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அவரை, முன்விரோதம் காரணமாக, அதே பகுதியை சேர்ந்த ரவுடி புகழேந்தி 27; தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
தடுக்க முயன்ற அவரது தாய் இந்துமதிக்கும் வெட்டு விழுந்தது.
இது குறித்து கிருமாம்பாக்கம், போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து புகழேந்தி, சிவபாலன் 25; பிரதீப், 20, ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனிடையே, கடந்த வாரம், ஜார்ஜ் பெர்னாண்டசை, தீர்த்து கட்டும் நோக்கில், கிருமாம்பாக்கத்தில் சுற்றித்திருந்த பிச்சைவீரன்பேட்டை சேர்ந்த மிட்டாய் மணி (எ) மணிகண்டனை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு கிருமாம்பாக்கம் சோலை வாழியம்மன் கோவில் அருகே புகழேந்தியின் கூட்டாளியான பாடிபில்டர் திருக்குமரன், 25; தனியாக நின்று கொண்டிருந்தார். அதனை அறிந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், தனது கூட்டாளிகளான தீபன், சக்தி, திலீப் ஆகியோருடன் சென்று திருக்குமரனை கத்தியால் வெட்டினர். தடுக்க முயன்ற திருக்குமரனுக்கு இரண்டு கைகளிலும் வெட்டி விழுந்து, படு காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு பொது மக்கள் ஓடி வந்ததால், கொலை மிரட்டல் விடுத்து அக்கும்பல் தப்பிச் சென்றது. படுகாயமடைந்த திருக்குமரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிந்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.