/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; புதுச்சேரி ரவுடிக்கு போலீஸ் வலை
/
முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; புதுச்சேரி ரவுடிக்கு போலீஸ் வலை
முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; புதுச்சேரி ரவுடிக்கு போலீஸ் வலை
முன்விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; புதுச்சேரி ரவுடிக்கு போலீஸ் வலை
ADDED : டிச 12, 2024 08:14 AM

கண்டமங்கலம்; சித்தலம்பட்டில் முன்விரோதம் காரணமாக வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய புதுச்சேரி ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ஆட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுனில். ரவுடியான இவர் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டு காலனியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை சுனில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தாய் வீட்டிற்கு சென்றிருந்த மனைவி சினேகாவை பார்க்க, சுனில் கடந்த 8ம் தேதி சித்தலம்பட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு, அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் யாசிக், கவியரசன் உள்ளிட்டோருடன் திருக்கனுாரில் உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் சுனில் - யாசிக் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த சுனில், மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் யாசிக்கின் தொடையில் கிழித்துள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. கவியரசன், சுனிலை பார்த்து 'உன் மிரட்டல் வேலை எல்லாம் புதுச்சேரியில் வைத்துக்கொள்' என கண்டித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, கவியரசன் வீட்டின் முன்பு பயங்கர சத்தத்துடன் ஒரு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. குண்டு வெடித்த இடத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஒரு கறவை மாடு காயம் அடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்து கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக ரவுடி சுனில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவான சுனிலை தேடி வருகின்றனர்.

