ADDED : செப் 22, 2024 02:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் சாதாரண உடையில் நேற்றிரவு திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, கிழக்குப்பகுதி எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா ஆகியோர் உத்தரவின் பேரில், வார இறுதி நாட்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யாநாராயணா, சப் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் நேற்றிரவு சாதாரண உடையில், புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களில் ஏறி சந்தேகப்படும் படி யாரேனும் உள்ளனரா என சோதனை செய்தனர். பஸ்சிற்காக காத்திருந்தவர்களில் சந்தேகப்படும் படியான நபர்களை பிடித்து, அவர்களின் பைகளை ஆய்வு செய்தனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.