பள்ளி, கல்லுாரிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை
பள்ளி, கல்லுாரிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை
UPDATED : நவ 14, 2026 10:56 PM
ADDED : நவ 14, 2026 10:56 PM
புதுச்சேரி: பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே புகையிலைப் பழக்கத்தைத் தடுக்கும் வகையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கிருமாம்பாக்கம், ரெட்டியார்பாளையம் பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி காவல்துறையின் 'ஆபரேஷன் விடியல்' திட்டத்தின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ், புகையிலைக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கிருமாம்பாக்கம், ரெட்டியார்பாளையம் போலீசார் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள், டீ கடைகளில் நேற்று முன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாணவர்களுக்கு சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். சில கடைகளில் இருந்து புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
