/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பஸ் கண்ணாடி சேதம் போலீசார் வழக்குப் பதிவு
/
தனியார் பஸ் கண்ணாடி சேதம் போலீசார் வழக்குப் பதிவு
ADDED : ஆக 29, 2025 03:15 AM
வில்லியனுார்: அரியூரில் தனியார் பஸ் கண்ணாடியை சேதப்படுத்திய கும்பல் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து அரியூர் வழியாக மதகடிப்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் அரியூர் சர்வீஸ் சாலை வழியாக செல்லாமல் பைபாசில் செல்கின்றன.
இதனால் அரியூர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பைபாஸ் இரும்பு வேலியை தாண்டி பெரும் சிரமத்துடன் பஸ் பிடித்து செல்கின்றனர்.
இதையடுத்து, அரியூர் கிராம மக்கள், இளைஞர்கள் சார்பில், போக்குவரத்து ஆணையர் மற்றும் போக்குவரத்து எஸ்.பி., உள்ளிட்டோரிடம் அரியூர் சர்வீஸ் சாலை வழியாக பஸ்களை இயக்க வேண்டும் என, மனு கொடுத்தனர்.
அடுத்த சில நாட்கள் மட்டும் பஸ்கள் சர்வீஸ் சாலை வழியாக சென்றன. அதன்பின், பஸ்கள் மீண்டும் டைமிங் பிரச்னையால் பைபாஸ் வழியாக செல்கின்றன. இதனால் பெண்கள் மற்றும் மாணவியர் பஸ் ஏறுவதற்கு மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மதகடிப்பட்டு பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற தனியார் பஸ், பைபாஸ்சில் சென்றதால் கோபமடைந்த அப்பகுதி இளைஞர்கள் பஸ் மீது கற்களை வீசினர்.
இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்தது. இது குறித்து பஸ் உரிமையாளர் கிருஷ்ணராஜ் அளித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.