/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் வழியாக டிப்பர் லாரிகள் செல்ல தடை விபத்தை தடுக்க போலீசார் அதிரடி
/
வில்லியனுார் வழியாக டிப்பர் லாரிகள் செல்ல தடை விபத்தை தடுக்க போலீசார் அதிரடி
வில்லியனுார் வழியாக டிப்பர் லாரிகள் செல்ல தடை விபத்தை தடுக்க போலீசார் அதிரடி
வில்லியனுார் வழியாக டிப்பர் லாரிகள் செல்ல தடை விபத்தை தடுக்க போலீசார் அதிரடி
ADDED : அக் 07, 2025 01:08 AM

புதுச்சேரி, அக். 7-
வில்லியனுார் அருகே டிப்பர் லாரி மோதி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இறந்த சம்பவம் எதிரொலியாக காலை, மாலை நேரங்களில் டிப்பர் லாரிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்த தமிழகப் பகுதியான திருவக்கரை, எறையூர், வானுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஜல்லி, செம்மண் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் டிப்பர் லாரிகள் மூலம் புதுச்சேரி நகரம் மற்றும் தமிழகப் பகுதியான கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த வழியாக செல்லும் டிப்பர் லாரிகள் அதிவேகமாகவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் லாரிகளை இயக்குவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, வில்லியனுார் அடுத்த ஊசுடு ஏரி அருகே கடந்த ஜூலை 8 ம் தேதி ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி, பள்ளிக்கு மோட்டார் பைக்கில் சென்ற மாணவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 மாணவர்கள் இறந்தனர். இதேபோல், கடந்த மாதம் 26ம் தேதி கூடப்பாக்கம் அருகே கல்லுாரிக்கு சென்ற மாணவன் பைக் மீது டிப்பர் லாரி மோதியதில், அவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து, பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதன் எதிரொலியாக, சாலை விபத்தை தவிர்க்கும் பொருட்டு, வில்லியனுார் போக்குவரத்து போலீசார் திருவக்கரை பகுதிகளில் இருந்து பத்துக்கண்ணு வழியாக வில்லியனுார், மேட்டுப்பாளையம் செல்லும் டிப்பர் லாரிகளை காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 3:30 மணி முதல் 6:00 மணி வரையிலும் இயக்க தடை விதித்துள்ளனர். இவற்றை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதனால், காலை மற்றும் மாலைகளில் பத்துக்கண்ணு- வழுதாவூர், செல்லிப்பட்டு, தொண்டமாநத்தம் சாலைகளில் டிப்பர் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இது போன்று நகர் பகுதிகளிலும் டிப்பர் லாரிகளுக்கு தடை விதிக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.