/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வாருங்கள் ஆளும்கட்சிக்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., சவால் வேடிக்கை பார்க்கும் கவர்னர் எதற்கு எனவும் கேள்வி
/
ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வாருங்கள் ஆளும்கட்சிக்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., சவால் வேடிக்கை பார்க்கும் கவர்னர் எதற்கு எனவும் கேள்வி
ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வாருங்கள் ஆளும்கட்சிக்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., சவால் வேடிக்கை பார்க்கும் கவர்னர் எதற்கு எனவும் கேள்வி
ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வாருங்கள் ஆளும்கட்சிக்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., சவால் வேடிக்கை பார்க்கும் கவர்னர் எதற்கு எனவும் கேள்வி
ADDED : அக் 07, 2025 01:10 AM

புதுச்சேரி, ; புதுச்சேரி அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள பா.ஜ., எம்.எல்.ஏ, சாய்சரவணன்குமார், நேற்று சட்டசபையில் கவர்னர், முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, பா.ஜ.,வை சேர்ந்த ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ., சாய்சரவணன்குமார் கடந்த ஜூன் மாதம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் தொகுதி பிரச்னை தொடர்பாக இவர், அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தார்.
இந்நிலையில், கரசூர் தொழிற்பேட்டை விவகாரத்தில் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய சாய் சரவணன்குமார், தொகுதி மக்களுக்காக 6ம் தேதி சட்டசபையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நேற்று முன்தினம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து நேற்று சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் காலை 11:25 மணிக்கு சாய்சரவணன்குமார் சட்டசபைக்கு வந்தவர், தனது அலுவலகத்திற்கு சென்று பூஜை செய்தார்.
பின்னர், 11:30 மணிக்கு சட்டசபை மைய மண்டபத்தின் நுழைவு வாயிலுக்கு வந்து நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் நீதி, நேர்மை ஜனநாயகத்தை கண்களாக பார்ப்பவர் பிரதமர் மோடி. அவரது ஆட்சியின் கீழ் உள்ள புதுச்சேரியில் அவரது கண்களை குத்தி பார்க்கும் நிழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருகிறது.
தினமும் ஒரு கொலை: புதுச்சேரி தற்போது கொலைச்சேரி ஆகிவிட்டது. தினமும் கொலைகள் நடக்கிறது. இதை உள்துறை அமைச்சர் தடுக்காதது ஏன். புதுச்சேரி சின்ன மாநிலம். கொலைகள் செய்வது யார். அவர்களை ஏன் 'என்கவுண்டர்' செய்யவில்லை, காரணம் என்ன? உள்துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். இதற்கு ஒரு முடிவு வரவேண்டும்.
ஆளும் கட்சியில் உள்ள 16 எம்.எல்.ஏ.,க்களில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 4 பேர் இருந்த போதிலும், அமைச்சரவையில் இடமளிக்கவில்லை . தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை, அமைச்சராக நியமிக்க மாட்டோம் என்றால் சட்டசபையை கலைத்து விட்டு, மக்களை சந்திப்போம் வாருங்கள்.
அமைச்சர் பதவி வழங்காதது ஏன்? பிரதமர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கியுள்ளார். பா.ஜ., கட்சி மக்களுக்கான கட்சி, அப்படிபட்ட கட்சியில் இருந்து கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக தவறு நடப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
உடனடியாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரை அமைச்சராக்க வேண்டும்.
கவர்னர் எதற்கு? பெண் எம்.எல்.ஏ., தனக்கு பாலியல் தொல்லை என்கிறார். அதற்கு கவர்னர் நடவடிக்கை இல்லை. கல்வித்துறையில் 100 நாட்களுக்கு மேலாக இயக்குனரை நியமிக்கவில்லை. புதுச்சேரியில் இயக்குனரே இல்லையா... இதை எல்லாம் கேட்கதான் கவர்னர். ஆனால், அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார்.
பாப்ஸ்கோ மூடல் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ., நான். பிரதமர் மோடி ஆட்சி புதுச்சேரியில் அமைந்தால் வளர்ச்சி ஏற்படும் என மக்களை சந்தித்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்றேன். பா.ஜ., ஆட்சி அமைய உழைத்த என் மீது 15 வழக்குகள் உள்ளன. ஆனால், இன்று ரெஸ்டோ பார் கொண்டு வருவதற்கு பாப்ஸ்கோவை மூடுகிறார்கள். 16 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரியத்தை கொடுத்து இயங்க விடுங்கள். மத்திய அரசிடம் இருந்து நிதி பெறவே பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்தோம்.
புதுச்சேரி மத்திய பல்கலையில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. புதுச்சேரி வளர்ச்சிக்கு தேவையானதை கேட்டு வாங்குங்கள். நம்முடைய மாநிலத்தின் உரிமையை கேட்டு வாங்க வேண்டும். மக்களுடைய உரிமை பறிபோகும் போது அதை தட்டி கேட்க தான் எம்.எல்.ஏ.,க்கள்., எம்.பி.,க்கள் உள்ளனர்.
நிலத்தை திருப்பி கொடுங்கள் என்னுடைய தொகுதியில் உள்ள கரசூரில் 800 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமாக உள்ளது. அது எனது தொகுதி மக்கள் அரசுக்கு கொடுத்தது. பக்கத்தில் உள்ள சிப்காட்டில் உள்ள கம்பெனிகளால் அந்த ஊரே மக்கள் வாழ தகுதியற்ற இடமாகிவிட்டது. அதனால், கரசூர் பகுதியில் சுற்றுசூழலை பாதிக்காத கம்பெனிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். இடம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு 25 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
தொழிற்பேட்டையில், தொழிற்சாலைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யும் குழுவில் முதல்வர், தொழில்துறை அமைச்சார், தொழில்துறை செயலர் எப்படி உறுப்பினர்களாக உள்ளனரோ அதேபோல், தொகுதி எம்.எல்.ஏ.,வும் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அப்போதுதான், எனது தொகுதியில் தவறான கம்பெனிகள் வருவதை தடுக்க முடியும். தொகுதி மக்கள் கேள்விக்கு யார் பதில் சொல்வது. நிர்வாகம் நடத்த தெரிந்தால் நடத்துங்கள். இல்லை என்றால், நிலத்தை திருப்பி கொடுங்கள். மக்கள் விவசாயம் செய்யட்டும்.
கட்சி முக்கியமில்லை: எனது தொகுதியில் ரெஸ்டோ பார் தேவையில்லை என தெரிவித்தும், தந்தள்ளனர். ரெஸ்டோ பாரை மூடக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்தேன். அதற்கு அவர் அறிக்கை கேட்டுள்ளார். கவர்னர் மாளிகை, சட்டசபை எதிரல் ரெஸ்டோ பார் திறந்தால் அனுமதிப்பீர்களா? என் தொகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் விவசாய கல்லுாரிகளுக்கு எதிரில் ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக மூட வேண்டும். அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரி யார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாரும் கேள்வி கேட்க வேண்டும். எனக்கு கட்சி முக்கியம் இல்லை. மக்கள் தான் முக்கியம்.
போராட்டம் ரத்து ஏன்: அதனால் தான் தொகுதி மக்களின் பிரச்னைக்காக சட்டசபையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டேன். கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுரானா, மாநில தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினர். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும், 15 நாள் அவகாசம் கோரினர்.
அதனையேற்று இன்று துவங்க இருந்த உண்ணாவிரத போராட்டம் ஒத்தி வைத்துள்ளேன். நிர்வாகிகள் கூறியபடி 15 நாளில் எனது கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை எனில், தொகுதி மக்களை திரட்டி சிறை நிறப்பும் போராட்டம் நடத்துவேன் என்றார்.