/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு ரூ.3,500 ! கவர்னருக்கு கோப்பு அனுப்பினார் முதல்வர்
/
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு ரூ.3,500 ! கவர்னருக்கு கோப்பு அனுப்பினார் முதல்வர்
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு ரூ.3,500 ! கவர்னருக்கு கோப்பு அனுப்பினார் முதல்வர்
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு ரூ.3,500 ! கவர்னருக்கு கோப்பு அனுப்பினார் முதல்வர்
ADDED : ஜன 13, 2026 06:42 AM

புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசாக ரூ.3,500 வழங்க அரசு இறுதி முடிவு செய்து, கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது. தமிழகத்தில் 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் ரொக்க பரிசு கொடுக்கப்பட்டது. புதுச்சேரியில் அதை தாண்டி 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு கொடுக்க என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி அரசு முடிவு செய்தது.
ஆனால், அரசிடம் போதிய நிதி இல்லாத நிலையில் மத்திய அரசின் கதவை தட்டப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் மனு கொடுக்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை.
இதற்கிடையில் பொங்கல் ரொக்கப் பரிசு தொடர்பாக முடிவெடுக்க கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அதிகாரிகளுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி மக்கள் மாளிகையில் மதியம் 12 மணியளவில் நடத்த கூட்டத்தில், முதல்வர் ரங்கசாமி, அனைத்து துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.
தலைமை செயலர் சரத் சவுகான் இணையம் வழியாக இணைந்தார். மதியம் 1.20 மணி வரை நடந்த இக்கூட்டத்தில் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன்கார்டுகளுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தினார். அதை தொடர்ந்து ஒவ்வொரு துறையாக இருந்த கையிருப்பு நிதி ஆராயப்பட்டது.
தொடர்ந்து வெளிச்சந்தையில் கடன் வாங்காமல் அரசின் நிதியை கொண்டு ரூ.3 ஆயிரம் மட்டுமே பொங்கல் ரொக்கம் பணம் வழங்கி சமாளிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அது இருக்கட்டும் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் கொடுப்பதற்கான வழியை கூறுங்கள் என்று முதல்வர் கூறினார். கூட்டத்தில் பொங்கல் ரொக்கம் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன், நிதித் துறை ஒப்புதல் அளித்த போதிலும், எவ்வளவு தொகை என்பதை இறுதி செய்யப்படாததால், டென்ஷனான முதல்வர் ரங்கசாமி பகல் 1:20 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து அரசு செயலர்கள் மீண்டும் முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் மாலை 5;௦௦ மணிக்கு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதிலும், முதல்வர் சமாதானமாகவில்லை. பெரிய மாநிலமான தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கொடுக்கும்போது, சிறிய மாநிலமான புதுச்சேரியில் ரூ.4 ஆயிரம் கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்றார்.
அங்கிருந்து புறப்பட்ட அரசு செயலர்கள், இரவு 7:30 மணிக்கு மீண்டும் சட்டசபை அலுவலகத்தில் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நீண்ட ஆலோசனைக்கு பின் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் கார்டிற்கும் ரூ.3,500 கொடுக்க முடிவு செய்து, இரவோடு இரவாக கவர்னருக்கு கோப்பு அனுப்பப்பட்டது. எனவே பொங்கலுக்கு பிறகு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு தலா 3,500 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
இதற்கான முறையான அறிவிப்பை இன்று முதல்வர் வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எப்போது கிடைக்கும்?
3,500 ரூபாய் பொங்கல் ரொக்கப் பரிசுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கியதும், நாளை 14ம் தேதிக்குள் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கு பணத்தை வழங்க அரசு முயற்சித்து வருகிறது. இருப்பினும் பொங்கல் விடுமுறையால் நடைமுறை சிக்கல் எழுந்துள்ளது. கவர்னர் ஒப்புதல் கொடுத்து கணக்கு கருவூலத் துறை பணத்தை ரிலீஸ் செய்து, குடிமை பொருள் வழங்கல் துறை வழியாக அனைத்து ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்குகளுக்கு செலுத்த வேண்டும்,. குறுகிய நாட்கள்.. தொடர் விடுமுறையால் சிக்கல் எழுந்தால், பொங்கலுக்கு பிறகு ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

