சிறுவன் பலி எதிரொலியால் கடற்கரையில் துருபிடித்த மின்கம்பங்கள் அகற்றம்
சிறுவன் பலி எதிரொலியால் கடற்கரையில் துருபிடித்த மின்கம்பங்கள் அகற்றம்
ADDED : செப் 28, 2026 07:01 PM
புதுச்சேரி: கடற்கரையில் மின்கம்பம் உடைந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக மின்துறை அதிகாரிகள் கடற்கரையில் துருபிடித்த மின்கம்பங்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் பைசல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், மக்களிடம் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியச் சுற்றுலாப் பகுதியான கடற்கரை சாலையில் நேர்ந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதிகாரிகள் தீவிரப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
அதன்படி, நேற்று காலை மின்துறை அதிகாரிகள் கடற்கரைச் சாலை முழுவதிலும் உள்ள அனைத்து மின்கம்பங்களின் நிலை தன்மை குறித்து ஆய்வு செய்தனர். அதில், துருப்பிடித்து, பலவீனமாக எந்நேரத்திலும் உடைந்து விழும் அபாயகரமாக நிலையில் இருந்த மின்கம்பங்கள் கண்டறிந்து அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு குழந்தையின் உயிர் பலிக்கு பிறகே அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
