புதுச்சேரி நகர பகுதியில் மின்தடை பொதுமக்கள் கடும் அவதி
புதுச்சேரி நகர பகுதியில் மின்தடை பொதுமக்கள் கடும் அவதி
ADDED : ஜூன் 10, 2026 04:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதி முழுதும் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
நெய்வேலியில் இருந்து வில்லியனுார் தானியங்கி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வருகிறது. அங்கிருந்து புதுச்சேரி நகரம் முழுதும் மின் வினியோகம் வழங்கப்படும். இந்நிலையில் வில்லியனுார் மின் நிலையத்தில் பவர் டிரான்ஸ்பார்மர் ஆயில் கசிவு காரணமாக பழுதடைந்தது. இதனால் புதுச்சேரி முழுதும் நேற்று இரவு 8:20 மணிக்கு மின் வினியோகம் தடைப்பட்டது.
பின் பழுது சரிபார்க்கப்பட்டு இரவு 9:40 மணிக்கு மின்சாரம் நகரப்பகுதி முழுதும் சுழற்சி முறையில் வழங்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இது குறித்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் கூறுகையில், 'வில்லியனுார் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக நகர் முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். சரிசெய்த பின் வழக்கம்போல் மின்சாரம் வழங்கப்படும்' என்றார்.
