/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வயல்களில் ட்ரோன் மூலம் யூரியா தெளிக்க பயிற்சி
/
வயல்களில் ட்ரோன் மூலம் யூரியா தெளிக்க பயிற்சி
ADDED : ஜன 03, 2024 06:31 AM

காரைக்கால் : காரைக்கால் வேளாண் அறிவியில் நிலையம் சார்பில், வயல்களில் ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். ஹைதராபாத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், மத்திய வறண்ட நில வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய பருவநிலை மாற்றத்திற்கு உகந்த மீள் தன்மையுள்ள வேளாண் திட்டத்தின் (நிக்ரா) கீழ் நானோ யூரியாவை ட்ரோன் மூலம் தெளிக்கும் முறை பற்றி பேட்டை, அத்திப்படுகை, நெய்வாச்சேரி கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் கூறுகையில், 'விவசாயிகள் நெல் பயிருக்கு தேவையான தழைச்சத்தை நானோ டி.ஏ.பி.,யை யூரியா வடிவத்தில் கொடுக்கின்றனர். விவசாயிகள் மண் பரிசோதனை செய்யாமலேயே யூரியாவை மண்ணில் இடுவதன் காரணமாக, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே இதனைக் கையாளும் விதமாக இப்கோ நிறுவனத்தின் நானோ டி.ஏ.பி., யூரியாவை இலை வழியாக ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தெளிப்பதால் நெற்பயிர் தழைச்சத்தை நேரடியாக எடுத்துக்கொள்ளும். இதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்' என்றார்.
தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் கூறுகையில், நானோ யூரியாவை ட்ரோன் மூலம் பயன்படுத்தும் முறை, அளவு மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.