/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு துறைகளுக்கு பிரிபெய்டு மீட்டர் இணைப்பு... அதிரடி; ரூ.482 கோடி பாக்கி தொகையால் மின் துறை தீவிரம்
/
அரசு துறைகளுக்கு பிரிபெய்டு மீட்டர் இணைப்பு... அதிரடி; ரூ.482 கோடி பாக்கி தொகையால் மின் துறை தீவிரம்
அரசு துறைகளுக்கு பிரிபெய்டு மீட்டர் இணைப்பு... அதிரடி; ரூ.482 கோடி பாக்கி தொகையால் மின் துறை தீவிரம்
அரசு துறைகளுக்கு பிரிபெய்டு மீட்டர் இணைப்பு... அதிரடி; ரூ.482 கோடி பாக்கி தொகையால் மின் துறை தீவிரம்
ADDED : ஏப் 26, 2025 04:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் பல கோடி பாக்கி வைத்துள்ள சூழ்நிலையில் பிரிபெய்டு மின் மீட்டர்கள் அமல்படுத்துவது தொடர்பாகமின்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
புதுச்சேரியில் வீட்டு உபயோக மின்சாரம், உயர் மின் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் கம்பெனிகள் என, மொத்தம் 5.25 லட்சம் மின் நுகர்வோர்கள் உள்ளனர். மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 450 மெகாவாட் மின்சாரம் தேவை.
இதற்காக, நெய்வேலி, ராமகுண்டம் அனல்மின் நிலையங்கள், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை புதுச்சேரி மின்துறை வாங்குகிறது. இதற்காக ஆண்டு தோறும் 2 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.
ஆனால், மின் கட்டண வரி வசூல் என்று வரும்போது மின் துறை திணறுகிறது. காலத்தோடு மின்கட்டணம் வசூல் செய்ய முடியவில்லை. மின் கட்டணம் கட்டாத வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு எச்சரிக்கை மூலம் ஒருவழியாக மின் துறை கலெக் ஷன் செய்து விடுகிறது. ஆனால் அரசு துறைகளிடமிருந்து தான் நிலுவை மின் கட்டணத்தை வசூலிக்க முடியவில்லை.
பல கோடி அப்பு...
புதுச்சேரி மின் துறைக்கு 226 எண்ணிக்கையிலான அரசு நிறுவனங்கள் மொத்தம் ரூ.481.65 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. தனியார் நிறுவனங்களை பொருத்தவரை ரூ.108.36 கோடி மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. இதில் 22 பெரிய மற்றும் சிறிய தனியார் நிறுவனங்களும் உள்ளடக்கம்.
பல கோடி ரூபாய் நிலுவை தொகை தொடர்பாக அரசு துறைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கு பல முறை நினைவூட்டல் அனுப்பியும் பணத்தை கட்டவில்லை. அதையடுத்து முதற்கட்டமாக அரசு துறைகளுக்கு பிரிபெய்டு மின் மீட்டர் திட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
அரசு துறைகளுக்கு தற்போது மின் பயன்பாட்டுக்கு பிறகு கட்டணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. அரசு துறைகளுக்கு பிரிபெய்டு மின் திட்டம் அமல்படுத்தும்போது மொபைல்போன் ரீசார்ஜ் போல் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.
வீடுகளுக்கு எப்படி:
புதுச்சேரியில் பிரீபெய்ட் மின் மீட்டர் பொருத்தப்படும் கடந்த 2022 பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதற்கு ரூ.251 கோடியில் மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது. மத்திய அரசு அனுமதி தந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து விருப்ப அடிப்படையில் வீடுகளுக்கு மட்டும் பிரிபெய்டு திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் விரும்பினால் மின் கட்டண பயன்பாட்டிற்கு பிறகு பணம் செலுத்தும் போஸ்ட்பெய்டு திட்டத்தில் இணையலாம். அல்லது முன் கூட்டியே மின் கட்டணம் செலுத்தும் பிரிபெய்டு திட்டத்திற்கும் மாறலாம்.
மின் துறை அதிகாரிகள் கூறுகையில், 'பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கு தனித்தனியே பல கோடி ஒதுக்கப்படுகிறது. ஆனால் மின் கட்டணத்தை மட்டும் கட்டாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றன. பிரிபெய்டு திட்டம் அமல் செய்யும்போது மின் துறைக்கு சுமை குறையும்' என்றனர்.

