உழவர் சந்தையில் விலைப்பட்டியல் ராமு எம்.எல்.ஏ., கோரிக்கை
உழவர் சந்தையில் விலைப்பட்டியல் ராமு எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஆக 29, 2026 05:32 PM
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ராமு எம்.எல்.ஏ., பேசியதாவது;
புதுச்சேரி – கடலுார் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து துவங்க வேண்டும். நோணாங்குப்பம் பாலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் புனரமைக்க வேண்டும். காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிப்படையும் சூழல் நிலவுவதால், விளைபொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க கிடங்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
உழவர் சந்தைகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தினமும் காய்கறி விலைப்பட்டியல் வெளியிட வேண்டும். நிலங்களை விற்கும் சூழலில், சிட்டா மற்றும் நிலப் பத்திரங்கள் வைத்திருக்கும் விவசாயிகளை ரீ-சர்வே என்ற பெயரில் அலையவிடாமல் உடனடியாக நில விற்பனை முறைகளை எளிதாக்க வேண்டும்.
55 வயதைக் கடந்த முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில், பிறப்பு, படிப்பு சான்றிதழ் கேட்பதால் கடும் சிரமம் அடைகின்றனர். ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை ஆவணமாக கொண்டு முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதிய தொகையை நேரடியாகப் பதிவேற்றம் செய்யும் நோட்டுப் புத்தக முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை காரணம் காட்டி, வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்பு மறுப்பதை மாற்றி, உரிய தீர்வு எடுக்க வேண்டும்’ என்றார்.
