/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனைக்கு தரமற்ற மருந்து கொள்முதல்: மாஜி சுகாதாரத்துறை இயக்குனர்கள் உட்பட 6 பேர் கைது மாஜி
/
அரசு மருத்துவமனைக்கு தரமற்ற மருந்து கொள்முதல்: மாஜி சுகாதாரத்துறை இயக்குனர்கள் உட்பட 6 பேர் கைது மாஜி
அரசு மருத்துவமனைக்கு தரமற்ற மருந்து கொள்முதல்: மாஜி சுகாதாரத்துறை இயக்குனர்கள் உட்பட 6 பேர் கைது மாஜி
அரசு மருத்துவமனைக்கு தரமற்ற மருந்து கொள்முதல்: மாஜி சுகாதாரத்துறை இயக்குனர்கள் உட்பட 6 பேர் கைது மாஜி
ADDED : அக் 29, 2025 09:17 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், தரமற்ற மருந்து கொள்முதல் முறைகேடு வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனர்கள் இருவர் உள்ளிட்ட 6 பேரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19ம் ஆண்டு கர்ப்பிணிகளுக்கு வழங்கிய சத்து மாத்திரைகள், குழந்தைகளுக்கு வழங்கிய வைட்டமின் 'ஏ' மருந்துகள் தரமற்று இருந்ததால், கர்ப்பிணிகள், குழந்தைகள் வாந்தி எடுத்து மயங்கினர்.
இதையடுத்து, உடனடியாக மருந்துகள் திரும்ப பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், மருந்துகள் தரமற்று இருந்ததே காரணம் என, தெரிய வந்தது.
விசாரணையில், சுகாதாரத்துறையின் தேசிய சுகாதார இயக்ககத்தில் பணியாற்றிய மருந்தாளுநர் நடராஜன் என்பவர், தனது மனைவி புனிதா பங்குதாரராக உள்ள சாய்ராம் ஏஜென்சி மற்றும் தனது நண்பர் பெயரில் உள்ள பத்மஜோதி ஏஜென்சி ஆகிய இரு கம்பெனிகளை உருவாக்கி, மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலமாக அரசுக்கு ரூ. 44 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, மருந்தாளுநர் நடராஜன் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த மோசடி குறித்து சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில் மருந்தாளுநர் நடராஜன் மற்றும் என்.ஆர்.எச்.எம்., அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில், மருந்தாளுநர் நடராஜனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே புதுச்சேரி சட்டசபை அருகேயுள்ள மாநில சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் சி.பி.ஐ., மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மருந்து, மாத்திரை கொள்முதல் செய்யும் பிரிவில் விசாரணை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த தரமற்ற ரூ. 2.5 கோடி மதிப்பிலான மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், மருந்து கொள்முதல் வழக்கு தொடர்பாக இந்திய தணிக்கை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்திய தணிக்கை குழுவினர் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள என்.ஆர்.எச்.எம்., பிரிவு அதிகாரிகள், ஊழியர்களிடம் கடந்த ஆண்டு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடராஜன், தரமற்ற மருந்து கொள்முதல் வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் மருந்து முறைகேடு தொடர்பாக சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குனர்கள் ராமன், 67; மோகன்குமார், 65; முன்னாள் துணை இயக்குனர் அல்லிராணி,62; சாய்ராம் ஏஜென்சியின் பங்குதாரர்களான நடராஜன் மனைவி புனிதா, 34; நந்தகுமார், பத்மஜோதி ஏஜென்சி உரிமையாளர் மோகன் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.
பின், அவர்கள் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் முன்னாள் இணை இயக்குனர் அல்லிராணிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீதிபதி ஜாமினில் விடுவித்தார். மற்ற 5 பேரும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

