/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மார்க்கெட் கமிட்டியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மார்க்கெட் கமிட்டியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2025 07:17 AM

திருக்கனுா : கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளுக்கு பல மாதங்களாக பணப்பட்டுவாடா செய்யாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர்.
வியாபாரிகள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை உடனே பட்டுவாடா செய்யாமல் அலைகழித்து வருகின்றனர்.
இதனை கண்டித்து, விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திருக்கனுார் கடை வீதியில் துவங்கிய ஊர்வலத்தை அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் கலியவரதன் துவக்கி வைத்தார். மார்க்கெட் கமிட்டி எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் முருகையன், பொருளாளர் ஜெயராமன் தலைமை தாங்கினர்.
துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், பாஸ்கர், துணை செயலாளர்கள் ஆதிமூலம், பழனி, சங்க பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்புக்குழு பொதுச் செயலாளர் ரவி கண்டன உரையாற்றினார். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளிடம் வாங்கும் விளைப்பொருட்களுக்கு உடனே பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். அலைக்கழிக்கும் வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு துணைப்போகும் கண்காணிப்பாளரை பணி நீக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
நடவடிக்கை இல்லையெனில், சட்டசபை நோக்கி கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.