/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச மனைப்பட்டா கேட்டு திருபுவனை அருகே மறியல்
/
இலவச மனைப்பட்டா கேட்டு திருபுவனை அருகே மறியல்
ADDED : அக் 29, 2025 09:16 AM

திருபுவனை: திருபுவனை அருகே இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மக்கள் சாலை மறி யல் போராட்டம் நடத்தினர்.
மதகடிப்பட்டு அடுத்த நல்லுார்பேட்டில் 300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் நல்லுார் ஏரிக்கு கிழக்கே மந்தக்கரை பகுதியில் 2.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை நில ஆர்ஜிதம் செய்து, இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், நல்லுார் கிராமத்தில் உள் ள 2.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் மதகடிப்பட்டு நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் மற்றும் வில்லியனுார்-கூடப்பாக்கம் சாலையில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்கள் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இவர்களுக்கு நேற்று காலை மனைப்பட்டா வழங்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.
தகவலறிந்த நல்லுார் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காலை 8.30 மணிக்கு நல்லுார் அரசு ஆரம்பப் பள்ளி எதிரே திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருபுவனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. 10:45 மணி வரை போராட்டம் நீடித்தது.
வில்லியனுார் தாசில்தார் சேகர், துணை தாசில்தார் பிரேம்சந்தர், நில அளவை பதிவேடுகள் துறை தாசில்தார் சந்தோஷ்குமார், உதவி இயக்குனர் சகாயராஜ், இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதனையேற்று 11:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக மதகடிப்பட்டு-மடுகரை சாலையில் 2:30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

