புதுச்சேரி: இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு) புதுச்சேரி மாநில குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்டாஞ்சாவடி, கட்டட தொழிலாளர் நல வாரியம் எதிரே கண்டன ஆர்ப்பா ட்டம் நடந்தது.
சங்கத்தின் கவுரவத் தலைவர் கலியன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் சுரேந்திரன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநிலத் தலைவர் பிரபுராஜ் கண்டன உரையாற்றினார். சங்க நிர்வாகிகள் சேகர், ஜீவாவனந்தம், ஜெயந்தி, ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வரும் தீபாவளியை முன்னிட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி தொகையை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். விபத்து காப்பீட்டு தொகையை ரூ. 6 லட்சமாக உயர்த்திட வேண்டும்.
சங்கத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் மருத்துவ உதவியாக ரூ. 50 ஆயிரம் வழங்கிட வேண்டும். நல வாரிய அலுவலகத்தில் மருத்துவரை பணியமர்த்தி, தொழிலாளர்கள் மருத்துவ சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும்.
நலவாரியத்தின் நிதியை முழுமையாக கட்டட தொழிலாளர்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.