/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசு வழங்க போதிய... நிதி கொடுங்க...:மத்திய நிதி அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
/
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசு வழங்க போதிய... நிதி கொடுங்க...:மத்திய நிதி அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசு வழங்க போதிய... நிதி கொடுங்க...:மத்திய நிதி அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் ரொக்க பரிசு வழங்க போதிய... நிதி கொடுங்க...:மத்திய நிதி அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்
ADDED : ஜன 10, 2026 05:18 AM

புதுச்சேரி: பொங்கலுக்கு ரொக்கப் பரிசு வழங்க முடிவு செய்துள்ள புதுச்சேரி அரசு, மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, போதிய நிதியை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் பொங்கலுக்கு ரொக்கப் பரிசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், போதிய நிதி இல்லாத நிலையில் பொங்கல் ரொக்கப் பரிசு வழங்குவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தலைமை செயலர், நிதி துறை அதிகாரிகளை இருமுறை அழைத்து பேசிய முதல்வர் ரங்கசாமி, பொங்கல் ரொக்க பரிசு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்திட உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு அரசு துறைகளிலும் கையிருப்பு நிதி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் உள்ள 3.47 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க ரூ.170 கோடி தேவைப்படுகிறது. புதுச்சேரி அரசின் 14,100 கோடி ரூபாயிற்கான திருத்திய பட்ஜெட் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சென்றுள்ள நிலையில், ரூ.170 கோடி பொங்கல் பரிசு தொகைக்காக மத்திய அரசின் உதவியை புதுச்சேரி அரசு நாடியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, புதுச்சேரி அரசியல் நிலவரம், கூட்டணி குறித்து பேசிய முதல்வர், பொங்கல் ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது. திருத்திய பட்ஜெட் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்றுள்ள நிலையில், கூடுதல் நிதியை புதுச்சேரி அரசுக்கு வழங்க வலியுறுத்தினார்.
அனைத்து விபரங்களையும் கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எவ்வளவு நிதி தேவை, அது தொடர்பான ஆவணங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில் நேற்றிரவே புதுச்சேரிக்கு தேவைப்படும் நிதி தொடர்பான தகவல்களை அரசு துறைகள் அவசரமாக திரட்டின. இந்த ஆவணங்களுடன் இன்று 10ம் தேதி டில்லி செல்லும் அமைச்சர் லட்சுமி நாராயணன், முதல்வர் ரங்கசாமி சார்பில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார். டில்லியில் கருத்தரங்கை முடித்துக்கொண்டு அவர் மத்திய நிதி அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
முதல்வர் ரங்கசாமியை சந்தித்த பா.ஜ.,வினர் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மனு அளித்தனர். ஆனால் ஏற்கனவே 750 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதனால், ரூ.5 ஆயிரத்திற்கு பதிலாக, ரூ.4 ஆயிரத்தை பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

