ADDED : ஜன 30, 2025 06:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி தொழில்நுட்பபல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து, 'லே பான்யன் டெ பெக்' தன்னார்வ அமைப்பை துவக்கி, கல்வி, மகளிர் முன்னேற்றம், சமுதாய நலன் சார்ந்த பல்வேறு நலப்பணிகளை செய்து வருகின்றனர்.
அதில், பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு கடந்த 8 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, 2024-25ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் கலந்து கொண்டு, ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவியை55 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
லே பான்யன் டெ பெக் அமைப்பின் துணைத் தலைவர்கள் வெங்கட்பெருமாள், பொதுச் செயலாளர்கள் செல்வராஜ், விவேகானந்தன், ஞான பிளோரன்ஸ்சுதா,போராசிரியர்கள் சாருலதா, ஜெயபாரதி, சந்தானலட்சுமி, சத்தியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
கல்வி உதவிதொகையானது சீட் பவுண்டேஷன் மூலம் ரூ. 1.2 லட்சம், முன்னாள் மாணவர் ஸ்ரீராம் அறக்கட்டளை மூலம் ரூ. 1.5 லட்சம், லே பான்யன் டெ பெக் அமைப்பு மூலம் ரூ. 4.3 லட்சம் நிதியளிக்கப்பட்டது.