/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கு மானிய நலத்திட்ட உதவி வழங்கல்
/
விவசாயிகளுக்கு மானிய நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 14, 2024 06:12 AM

புதுச்சேரி : நிலங்களில் ஆழ்குழாய் கிணறு,நிலத்தடி நீர் குழாய்,தெளிப்பு நீர் பாசன கருவிகள் நிறுவ விவசாயிகளுக்கு மானிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மாநில நிலத்தடிநீர் மற்றும் மண்வளப் பாதுகாப்பு பிரிவின் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், நீர்மூழ்கி மோட்டார் பொருத்தவும் மானியம் வழங்கப்படுகிறது.
நடப்பு 2023--24ம் நிதி ஆண்டில் ஏற்கனவே முதல் கட்டமாக 70 பொது விவசாயிகளுக்கு மானியமாக ரூ.48.46 லட்சம், 6 அட்டவணை இன விவசாயிகளுக்கு ரூ.6.92 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக ஆழ்குழாய் கிணறு அமைக்க 25 பொது விவசாயிகளுக்கு 65 சதவீத மானியமாக ரூ.28.52 லட்சமும், இரண்டு அட்டவணை இன விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியமாக ரூ.1.65 லட்சம் மானியமாக நேற்று வழங்கப்பட்டது.
நீர்மூழ்கி மோட்டார் பொருத்த, 22 பொது விவசாயிகளுக்கு 65 சதவீதம் மானியமாக ரூ.10 லட்சமும் , இரண்டு அட்டவணை இன விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியமாக ரூ.1. 20 லட்சம் வழங்கப்பட்டது.
பாசன நீரை சிக்கனப்படுத்தும் சொட்டுநீர் பாசன கருவிகள் நிறுவ, 90 சதவீத மானியமாக ஏழு பொது விவசாயிகளுக்கு ரூ.1 .99லட்சம் மானியமாக வழங்கப்பட்டது.
மேலும், தங்கள் நிலத்தில் நிலத்தடி நீர் பாசன குழாய்கள் அமைத்த மூன்று அட்டவணை இன விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டது. இந்த மானிய உதவிகளுக்கான அரசாணைகளை சபாநாயகர் செல்வம்,வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தேனீஜெயக்குமார் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி, பயனாளிகளுக்கு வழங்கினார்.
அரசு கொறடா ஆறுமுகம், வேளாண் துறை இயக்குனர் வசந்தகுமார், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

