/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம் வழங்கல்
/
விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம் வழங்கல்
ADDED : அக் 22, 2024 05:54 AM

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகளுக்கான உற்பத்தி மானியத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.
புதுச்சேரி அரசு வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல், பருத்தி, எள் மற்றும் பயிர் வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023-24ம் ஆண்டில் பருத்தி, எள் மற்றும் பயிர் வகைகளை சாகுபடி செய்த 2267 பொது பிரிவு விவசாயிகளுக்கு ரூ.2.70 கோடியும், அட்டவணை பிரிவை சார்ந்த 298 விவசாயிகளுக்கு ரூ.36.70 லட்சமும் வழங்கப்படுகிறது.
மேலும், காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2023-24ம் ஆண்டு சம்பா, நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 17 அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு ரூ.1.20 லட்சம், நெல் விதை உற்பத்தி செய்த 4 விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை ரூ.2.52 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சத்து 42 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்தொகைக்கான காசோலையை சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி விவசாயிகளிடம் நேற்று வழங்கினார். இதில், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், சிவா எம்.எல்.ஏ., வேளாண் இயக்குனர் வசந்தகுமார், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத்தொகையானது நேற்று முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.