/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்கால் சீரமைப்பு பணி பொதுமக்கள் வாக்குவாதம்
/
வாய்க்கால் சீரமைப்பு பணி பொதுமக்கள் வாக்குவாதம்
ADDED : அக் 13, 2024 02:13 AM
பாகூர்: பாகூரில் வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி துவக்கத்தின் போது, ஒப்பந்ததாரர் - பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது.
பாகூர் மாதா கோவில் சந்திப்பு முதல் கிழக்கு வீதி சந்திப்பு வரை கழிவுநீர் வடிகால் வாய்க்கால் சீரமைத்து புதுப்பிக்க பொதுப் பணித்துறை மூலம் 9.26 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பூமி பூஜை நேற்று பாகூரில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.அப்போது, பொதுமக்கள்மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணியை துவங்கினால், விரைந்து முடிக்க முடியுமா என கேள்வி எழுப்பினர்.பாகூர் பகுதியில் போர்வெல் அமைக்கும் திட்டம் தோல்வி கண்ட நிலையில், மீண்டும் அதே ஒப்பந்ததாரரிடம் ஏன் இந்த பணியை ஒதுக்கி கொடுத்தீர்கள். இந்த பணியாவது சரியாக நடக்குமா எனவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, பொதுப்பணி துறை அதிகாரிகள், திட்டமிட்டபடி மூன்று மாதத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். பணியில்குறை இருந்தால் தெரிவியுங்கள் அது சரி செய்யப்படும் என்றனர்.
இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில், ஒப்பந்ததாரருக்கும், அவருக்கு எதிராக கேள்வி எழுப்பியவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறும் சூழல் நிலவியது. அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.