/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி - சென்னை சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது! கண்டெய்னர்களை அனுப்ப முடியாமல் பரிதவிப்பு
/
புதுச்சேரி - சென்னை சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது! கண்டெய்னர்களை அனுப்ப முடியாமல் பரிதவிப்பு
புதுச்சேரி - சென்னை சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது! கண்டெய்னர்களை அனுப்ப முடியாமல் பரிதவிப்பு
புதுச்சேரி - சென்னை சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது! கண்டெய்னர்களை அனுப்ப முடியாமல் பரிதவிப்பு
ADDED : மார் 08, 2024 06:48 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு தடபுடலாக துவங்கிய சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கிபோய் உள்ளது.
புதுச்சேரி உப்பளத்தில் உள்ள புதிய துறைமுகம் 1994ம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்துறைமுகம் மூலம் 2006ம் ஆண்டும் வரை 35,883 டன் சரக்குகள் கையாளப்பட்டது.
அதன் பிறகு எந்த கப்பலும் துறைமுகத்திற்கு வரவில்லை. பல ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படி பெரிய அளவில் ஏற்றுமதி, இறக்குமதி நடைபெறவில்லை.
புதுச்சேரி, துறைமுகத்திற்கு புத்துயிர் ஊட்டும் விதமாக, புதுச்சேரி அரசு, சென்னை துறைமுகத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் புரிந்தது.
அதன்படி சென்னை துறைமுகத்திற்கு பெரிய கப்பல்களில் வரும் கண்டெய்னர்கள், பார்ஜ் எனப்படும் மிதவை கப்பல் மூலம் கடல் மார்க்கமாக, புதுச்சேரி துறை முகத்திற்கு கொண்டு வந்து, இருப்பு வைக்கவும், இங்கிருந்து தேவைப்படும் இடங்களுக்கு பிரித்து அனுப்பவும் திட்ட மிடப்பட்டது.
அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு தடபுடலாக புதுச்சேரியில் இருந்து கண்டெய்னர் சரக்கு கப்பல் போக்குவரத்து துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் துவங்கிய வேகத்தோடு எந்த கப்பலும் ஓடாமல் ஓராண்டாக முடங்கி கிடக்கிறது.
புதுச்சேரியில் இருந்து ஒரு கண்டெய்னர்களும் செல்லவில்லை. இதனால் தொழில் துறையினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வேறுவழியின்றி சென்னை துறைமுகத்திற்கு நேரடியாக சரக்கு கண்டெய்னர்களை அனுப்பி வருகின்றனர்.
என்ன பிரச்னை
முடங்கி கிடக்கும் அளவிற்கு புதுச்சேரி துறைமுகத்திற்கு வரவேற்பு இல்லாமல் இல்லை. ஆனால் கப்பல் உரிமையாளருக்கு அதனை வாடகை எடுத்து கண்டெய்னர் ஏற்றி வரும் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள கப்பல் பழுது சரிபார்ப்பு தொகை பிரச்னை காரணமாக எந்த முடிவு எட்டப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக மாநிலத்தில் கப்பல் சரக்கு போக்குவரத்து இயக்கப்படாமல் முடங்கியுள்ளது.
நன்மைகள் ஏராளம்
புதுச்சேரி துறைமுகம் செயல்பட துவங்கினால் சென்னை துறைமுகத்திற்கு தான் அதிக நன்மை. ஏற்கனவே சென்னை மாநகரம் வாகன போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறுகிறது.
கப்பலில் இருந்து கண்டெய்னர்களில் லாரி ஏற்றி செல்வதால் மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதன் காரணமாகவே சென்னை துறைமுகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்பட பல்வேறு விஷயங்களில் புதுச்சேரி துறைமுகத்திற்கு முழு ஒத்துழைத்து தந்து வருகின்றது.
ஆனால் கப்பல் உரிமை யாளர் - நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை முடிவு எட்டப்படாமல் முடங்கியுள்ளது.
புதிய சரக்கு கப்பல்
சென்னை துறைமுகத்திற்கு ஆண்டிற்கு சராசரியாக ஒரு சரக்கு கப்பல் 1,200 கண்டெய்னர்களை புதுச்சேரி துறைமுகத்திற்கு கொண்டு வர உள்ளது.
இதேபோல், புதுச்சேரியில் இருந்தும் ஆண்டிற்கு 2,000 கண்டெய்னர்கள் வரை சென்னை துறைமுகத்திற்கு கப்பல் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை - புதுச்சேரி இடையே சாலை மார்க்கமாக கண்டெய்னர்களை எடுத்துச் செல்லும்போது, ஒரு கண்டெய்னருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.
ஆனால், கப்பல் மூலம் எடுத்துச் செல்லும்போது ரூ.23 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. இது புதுச்சேரி, தமிழக பகுதியில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு பல வகையில் செலவினை மிச்சப்படுத்தும்.
எனவே, தொலைநோக்கு பார்வையுடன் கப்பல் உரிமையாளர் - கண்டெய்னர் நிறுவனத்திற்கு இடையே உள்ள பிரச்னையை அரசு விரைவாக தீர்வு காண நிர்பந்திக்க வேண்டும். இல்லையெனில் வேறு புதிய சரக்கு கப்பலை சென்னை - புதுச்சேரி இடையே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

