UPDATED : ஆக 23, 2026 06:45 PM
ADDED : ஆக 23, 2026 06:43 PM

புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரை பயன்படுத்தி, ஏராளாமான வாகனங்கள் சென்னை,மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மற்றும் உள்ளூர் பொதுமக்களும், தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இச்சாலையில், வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மின் கேபிள் புதைப்பதற்காக கொக்குபார்க் சிக்னல் முதல் சிவாஜி சிலை வரை சாலையொரம் பள்ளம் தோண்டினர். கேபிள் புதைக்கப்பட்ட பின் அப்பள்ளங்கள் மண் கொட்டி நிரப்பபட்டன.
தார் ஊற்றாத இந்த சாலையில் செல்லும் பொழுது ஏற்படும் புழுதியினால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, கொக்குபார்க் சிக்னல் முதல், ஏர்போர்ட் சாலை சந்திப்பு வரை தார் சாலை அமைக்கபட்டது.
ஆனால், ஏர்போர்ட் சந்திப்பு முதல் சிவாஜி சிலை வரை தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மழை காலங்களில் சறுக்கி விழுந்தும், வெயில் சமயங்களில், புழுதி பறப்பதாலும், அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் விடுபட்டுள்ள பகுதியிலும் தார் சாலை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
