ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கடலுார் நபர்கள் உட்பட 3 பேர் கைது
ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கடலுார் நபர்கள் உட்பட 3 பேர் கைது
UPDATED : ஆக 23, 2026 06:44 PM
ADDED : ஆக 23, 2026 06:43 PM

பாகூர்: பாகூரில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரியில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, நேற்று முன்தினம் இரவு பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சோரியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சோரியாங்குப்பம் மேட்டு தெருவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் காருடன் 2 பேர் நின்றிருந்தனர்.
அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், கடலுார், நெல்லிக்குப்பம் சுல்தான்பேட் தெருவை சேர்ந்த அப்துல் ரஷீத், 48 ; கோண்டூர் விநாயகா தெருவை சேர்ந்த ஜான் கென்னடி, 39; என்பதும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காரில் கொண்டு வந்து, சோரியாங்குப்பம், மேட்டுத் தெருவில் உள்ள ஆனந்தன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆனந்தன் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 138 கிலோ எடை கொண்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள், போர்டு டைட்டானியம் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அப்துல் ரஷீத், ஜான் கென்னடி, ஆனந்தன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
