திக்குத் தெரியாத காட்டில் புதுச்சேரி த.வெ.க. இடைத்தேர்தலில் முடிவெடுக்க முடியாமல் திணறும் நிர்வாகிகள்
திக்குத் தெரியாத காட்டில் புதுச்சேரி த.வெ.க. இடைத்தேர்தலில் முடிவெடுக்க முடியாமல் திணறும் நிர்வாகிகள்
ADDED : செப் 12, 2026 08:22 PM
புதுச்சேரி: இடைத்தேர்தலில் த.வெ.க., நிலைப்பாடு தெரியாமல் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திக்கு தெரியாமல் தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி அரசியல் களம் இப்போது தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை மையமாக வைத்து, சுழன்று வருகிறது.
ஆளும் என்.ஆர்.காங்., சார்பில் அசோக் ஆனந்தும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சார்பில் சேதுசெல்வமும் களமிறக்கப்பட்டு, வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர்.
வரும், அக்.6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 9-ம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் வரும், 16-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இன்னும் மூன்று நாட்கள் தான் கால அவகாசம் உள்ளது.
ஆனால், புதுச்சேரி அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள த.வெ.க., கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஓட்டு வங்கியைக் கணிசமாகக் கொண்டுள்ள த.வெ.க., கடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. இரண்டு தொகுதியில் வெற்றியும் பெற்றது.
தேர்தல் களத்தில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்த பின்னரும், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் கட்சி தலைமை காட்டும் மெத்தனப் போக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் இந்தத் தேக்க நிலைக்கு தெளிவான நிர்வாகக் கட்டமைப்பு இல்லாததே முக்கியக் காரணம் என மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
புதுச்சேரியில் த.வெ.க., மாநில செயலாளராகப் பொறுப்பேற்ற சரவணன் மறைந்த பிறகு, அப்பதவிக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதன் தேர்தல் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு தேர்தலை வழிநடத்தினார். ஆனால், தேர்தலுக்கு பின் கட்சி தலைமை புதிய நிர்வாகிகளை நியமித்து, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த ஆர்வம் காட்டவில்லை.
இதனால், சாமிநாதனும் அமைதி காத்து வருவதால், தற்போதைய சூழலில் கட்சியை வழிநடத்த ஆட்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் த.வெ.க. நேரடியாக களமிறங்குமா, அல்லது கூட்டணிக்கு ஆதரவு அளித்து பிரசாரம் செய்யுமா, அல்லது முற்றிலுமாக தேர்தலை புறக்கணிக்குமா என்பதில் கட்சித் தலைமை இன்னும் தனது மவுனத்தைக் கலைக்கவில்லை.
இது குறித்து மேலிடத்திடம் பேசி வழிகாட்டல் பெறக்கூட புதுச்சேரிக்கு பொறுப்பாளர்கள் இல்லாததால், யாரிடம் பேசி நிலவரத்தைத் தெரிந்து கொள்வது? என்று தெரியாமல் தவித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெறும் மக்கள் செல்வாக்கை மட்டும் வைத்துக்கொண்டு தெளிவான அமைப்போ, வழிகாட்டும் தலைமையோ இல்லாமல் இயங்கும் புதுச்சேரி த.வெ.க., தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களத்தில் திக்குத் தெரியாத காட்டில் பாதை தொலைத்த நிலையில் நிற்கிறது.
கட்சித் தலைமை உடனடியாகத் தலையிட்டு, புதுச்சேரிக்கான அதிகாரப்பூர்வ நிர்வாகிகளை நியமித்து, தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே தொண்டர்களின் சோர்வை நீக்கி, கட்சியின் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும்.
