/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ரூட்டை' மாற்றும் புதுச்சேரி அ.தி.மு.க.,
/
'ரூட்டை' மாற்றும் புதுச்சேரி அ.தி.மு.க.,
ADDED : டிச 21, 2025 03:41 AM
புதுச்சேரி அ.தி.மு.க., புது கூட்டணிக்கு தயாராகும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில், ஒரு காலத்தில் ஓஹோ என்று இருந்த அ.தி.மு.க., கால ஓட்டத்தில் கொஞ்சம், கொஞ்சமாக எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைந்து ஜெ., மறைவுக்கு பின், முடங்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இதற்கு பல காரணங்கள் கூறினாலும், ஒரே காரணம், கட்சி தலைமை, புதுச்சேரி அ.தி.மு.க.,வின் செயல்பாடுகளை கண்டு கொள்ளாததே என, தொண்டர்கள் குமுறுகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில், என்.ஆர். காங்., - பாஜ., கூட்டணியில் போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வி அடைந்ததே இந்த சரிவுக்கு பிரதான காரணம். இந்தத் தோல்வியை காரணம் கூறி பாஜ., தலைமை வரும் தேர்தலில் 2 தொகுதி மட்டுமே வழங்கப்படும் என, அ.தி.மு.க,விற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.
இதனால் வரும் தேர்தலில் போட்டியிட்டு கரையேறிவிடலாம் என, காத்திருந்தவர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர். தற்போது, தமிழக கட்சி தலைமையில், வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கும் நிலையில், புதுச்சேரியில் இருந்து 40 பேர் மட்டுமே நேற்று முன்தினம் வரை விருப்ப மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், கவலைக்கிடமான கட்சியை மீண்டும் புதுச்சேரியில் 'லைம் லைட்'டிற்கு கொண்டு வர புதுச்சேரி அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். அதில், வரும் தேர்தலில் நல்ல நிதி நிலைமையுடன் உள்ள த.வெ.க., மற்றும் ல.ஜ.க., (ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கட்சி) உடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம். இதனால், கூடுதல் தொகுதிகள் கிடைப்பதோடு, தேர்தல் செலவிற்கும் சிக்கல் இருக்காது என கட்சியின் தமிழக தலைமைக்கு கூறி உள்ளனர். அதற்கு கட்சி தலைமையும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

