/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சட்டசபை பிப்ரவரி 2ம் வாரத்தில் கூடுகிறது: 5 மாதத்திற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
/
புதுச்சேரி சட்டசபை பிப்ரவரி 2ம் வாரத்தில் கூடுகிறது: 5 மாதத்திற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டசபை பிப்ரவரி 2ம் வாரத்தில் கூடுகிறது: 5 மாதத்திற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுச்சேரி சட்டசபை பிப்ரவரி 2ம் வாரத்தில் கூடுகிறது: 5 மாதத்திற்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
UPDATED : ஜன 23, 2026 11:05 PM
ADDED : ஜன 23, 2026 05:10 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கடைசி சட்டசபை கூட்டம் வரும் பிப்ரவரி 2ம் வாரத்தில் கூடுகிறது. அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதன்படி கடந்தாண்டு மார்ச் 12ம் தேதி நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.13,600 கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வரும் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைபெற உள்ளதால், முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இருப்பினும், தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்கும் வரை அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட நிர்வாக செலவினங்களுக்கும், அரசின் நலத்திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பதற்கு ஏதுவாக ஏப்ரல் முதல் 5 மாதங்களுக்கு ரூ.6,000 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியும் மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சகத்தில் பெறப்பட்டுவிட்டது.
அதன்படி, வரும் பிப்ரவரி 2ம் வாரத்தில் சட்டசபையை கூட்டி, அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து, சபையின் ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதனையொட்டி, இடைக்கால பட்ஜெட் தயாரிப்பதற்கான பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் ரங்கசாமி, கடந்த தேர்தலில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அறிவித்த பெரும்பாலான நலத்திட்டங்களையும் கடும் நெருக்கடிகளுக்கு இடையே, மத்திய அரசை வலியுறுத்தி கூடுதல் நிதியை பெற்று செயல்படுத்தி உள்ளார்.
அதேபோன்று எதிர்வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களை கவர்ந்திடும் வகையில் புதிய திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்கள் அறிவிப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

