/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சட்டசபை வரும் 12ம் தேதி கூடுகிறது: காகிதமில்லா நடைமுறைக்கு மாற்றம்
/
புதுச்சேரி சட்டசபை வரும் 12ம் தேதி கூடுகிறது: காகிதமில்லா நடைமுறைக்கு மாற்றம்
புதுச்சேரி சட்டசபை வரும் 12ம் தேதி கூடுகிறது: காகிதமில்லா நடைமுறைக்கு மாற்றம்
புதுச்சேரி சட்டசபை வரும் 12ம் தேதி கூடுகிறது: காகிதமில்லா நடைமுறைக்கு மாற்றம்
ADDED : பிப் 01, 2025 05:47 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை வரும் 12ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் அரசின் கூடுதல் செலவினத்திற்கு ஒப்புதல் பெறப்படுகிறது.
புதுச்சேரி அரசின் 15வது சட்டசபையின் ஐந்தாவது பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதி கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது.
நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 11 நாட்கள் நடை பெற்ற இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக., 14ம் தேதியுடன் நிறைவு பெற்று, காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டசபையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற பொதுவான விதி உள்ளது. இதன்படி வரும் 12ம் தேதி சட்டசபை கூடுகிறது.
இது குறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது:
புதுச்சேரி சட்டசபையின் ஐந்தாவது கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி வரும் 12ம் தேதி காலை 9:30 மணிக்கு பேரவை வளாகத்தில் கூடுகிறது.
அன்றைய தினம் அரசின் 2024-25ம் நிதிஆண்டிற்கான கூடுதல் செலவினங்கள், சட்ட முன்வரைவு குறித்து விவாதிக்கப்பட்டு, சபையின் ஒப்புதல் பெறப்படுகிறது.
தொடர்ந்து, சட்டசபையில் அரசின் ஏடுகள் வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக அரசு துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கணக்காய்வு துறையின் ஆய்வறிக்கைகளும் சட்டசபையில் வைக்கப்படுகிறது. வரும் 12ம் தேதி அரசின் கூடுதல் செலவினத்திற்கு ஒப்புதல் பெற சட்டசபை கூடுவதால் இதில் கவர்னர் உரை இல்லை.
இதன்பின் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் துவங்கும். அந்த கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும்.
காகிதமில்லா சட்டசபை
புதுச்சேரி சட்டசபையை காகிதமில்லா நடைமுறைக்கு மாறுவதற்கான 'நேவா' எனும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதற்கான முழு நிதியை பார்லிமென்ட் விவகாரத் துறை ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் திட்ட அறிக்கை தயார் செய்து, பார்லிமென்ட் விவகாரங்கள் துறையின் ஒப்புதல் கடந்த 2022ம் ஆண்டு பெறப்பட்டது.
இத்திட்டத்தை நிறைவேற்ற கொல்கத்தாவை சேர்ந்த நிம்பஸ் சிஸ்டம் என்ற நிறுவனத்திற்கு 8.16 கோடிக்கு பணியாணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வந்தன. இதற்கான மின்னணு கட்டமைப்புகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எம்.எல்.ஏ.,க்களுக்கு அருகில் தொடுதிரை கணிணி அமைக்கப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லாத சட்டசபையாக புதுச்சேரி சட்டசபை செயல்படும். அதிகாரிகளுக்கும் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இனி, புதுச்சேரி சட்டசபை காகிதமற்ற சட்டசபையாக, பட்ஜெட் அனைத்தும் கணினி முறையில் சமர்ப்பிக்கும் சட்டசபையாக திகழும்.
இவ்வாறு சபாநாயகர் கூறினார்.