/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்! பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களால் பரபரப்பு
/
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்! பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களால் பரபரப்பு
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்! பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களால் பரபரப்பு
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவக்கம்! பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களால் பரபரப்பு
ADDED : ஜூலை 31, 2024 04:14 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று 31ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்குகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் இன்று காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. நாளை 1ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, வரும் 2ம் தேதி காலை 9:30 மணிக்கு, ரூ. 12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
சட்டசபை கூட்டத் தொடரில் வழக்கம்போல், மாநில அந்தஸ்து, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, ரேஷன் கடை திறக்காதது குறித்து எதிர்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன.
இதற்கிடையில், லோக்சபா தேர்தல் தோல்விக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தான் காரணம் என பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மேலும், தங்களுக்கு அமைச்சர், வாரிய தலைவர் பதவி கேட்டும் போர்க்கொடி உயர்த்தினர்.
டில்லிக்கு சென்று மத்திய அமைச்சர், பா.ஜ., தலைவர்களை சந்தித்து பா.ஜ., அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
அதிருப்தி எம்.எல். ஏ.,க்களின் பிரச்னை பா.ஜ.,வின் உட்கட்சி பிரச்னையாக இருந்தாலும், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியது. புதுச்சேரி வந்த பா.ஜ., பொறுப்பாளர் சுரானா, மத்திய அமைச்சர்களின் சமாதான பேச்சுகளை அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கவில்லை. மேலிட பொறுப்பாளரை சந்திக்காமலும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்தனர்.
சட்டசபை கூட்ட தொடரில் எதிர்கட்சியினர் போல, ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க உள்ளதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.
சமாதானப்படுத்த வந்த பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசியபோது, கூட்டணி அரசை கண்டித்து அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எதிர்கட்சி வரிசையில் அமர விரும்பினால், அமர்ந்து கொள்ளட்டும் என தெரிவித்ததாக வெளியான தகவலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணி கட்சியான பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களே ஆளும் அரசுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ளதால், சட்டசபை கூட்ட தொடரில் எவ்வாறு நடந்து கொள்வர் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி பிரச்னைகள், கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என்பதால், இன்று துவங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.