/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்திற்காக கையெழுத்து இயக்கம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
/
மாநில அந்தஸ்திற்காக கையெழுத்து இயக்கம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
மாநில அந்தஸ்திற்காக கையெழுத்து இயக்கம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
மாநில அந்தஸ்திற்காக கையெழுத்து இயக்கம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு
ADDED : மே 15, 2025 02:52 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்திற்கான கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு இதுவரை சட்டசபையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் மாநில அந்தஸ்து கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை. இதற்கிடையில், புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கேட்டு, வரும் 27ம் டில்லியில் நேரு எம்.எல்.ஏ., தலைமையில் போராட்டம் நடத்த பொதுநல அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இதனையொட்டி, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளன. மொத்தம் ஒரு லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்று, மனுவாக மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்து இயக்கத்தை, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் நேற்று முதல் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். மாநில அந்தஸ்து போராட்டம், கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணைத்துள்ள நேரு எம்.எல்.ஏ., கூறுகையில், 'புதுச்சேரி மாநில அந்தஸ்திற்காக பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பல கட்டங்களாக போராடி வருகிறோம். கடந்த இரண்டு சட்டசபை கூட்டத் தொடர்களில் மாநில அந்தஸ்து பெறுவதற்கான தனி நபர் தீர்மானத்தை கொண்டு வந்தேன். அதனை அரசு தீர்மானமாக நிறைவேற்றியும் கூட இன்னும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே, டில்லியில் வரும் 27ம் தேதி நடக்கும் போராட்டத்தின் வாயிலாக இதனை வெளிப்படுத்த உள்ளோம். மேலும் இக்கையெழுத்து இயக்கத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைத்துக் கட்சித் தலைவர்கள், பொதுநல அமைப்புத் தலைவர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள். தொழிலாளர்கள், மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் கையெழுத்திட்டு பங்கேற்க வேண்டும்' என்றார்.