/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷனில் கேழ்வரகு மாவு புதுவை முதல்வர் அறிவிப்பு
/
ரேஷனில் கேழ்வரகு மாவு புதுவை முதல்வர் அறிவிப்பு
ADDED : டிச 27, 2025 04:17 AM
புதுச்சேரி: “புதுச்சேரியில் ரேஷன் அட்டைக்கு, கேழ்வரகு மாவு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது,” என, முதல்வர் ரங்கசாமி கூறினார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு த் துறை சார்பில், வீர தீர குழந்தைகள் தினவிழா கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் நேற்று நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கிய முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
குழந்தைகளுக்கு வீர தீர கதைகள், நாட்டுப்பற்று, மொழிப்பற்றை கூறி வளர்க்க வேண்டும்.
கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகளுக்கும் அங்கன்வாடிகள் மூலம் ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பால், ஆரோக்கியமான உணவு மற்றும் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கு, 50,000 ரூபாய் வங்கியில் செலுத்துகிறோம். அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குகிறோம். இதை, 2,500 ஆக வழங்க உள்ளோம். முதியோருக்கு உதவித்தொகை, 500 ரூபாய் உயர்த்தி வழங்க உள்ளோம்.
முதியோர் உதவித்தொகை, இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்படுகிறது. இந்நிலையில், கேழ்வரகு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அனைத்து ரேஷன் அட்டைக்கும், ஒரு கிலோ கேழ்வரகு மாவு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

